ADVERTISEMENT

தேசமே ராணுவ வீரர்களின் பின்னால் இருக்கிறது, பாஜகவிற்கு  பின்னாலல்ல... பாஜகவை கடுமையாக விமர்சித்த உதயநிதி!

02:47 PM Jun 20, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

லடாக் எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி மூலமாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவவுமில்லை ராணுவ நிலைகளைக் கைப்பற்றவுமில்லை. இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின்மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது. ஒரே சமயத்தில் பல முனையங்களுக்கு செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உள்ளது. நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும். நாட்டின் எல்லைப் பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்புகளால் ரோந்து திறன் அதிகரித்துள்ளது. முப்படைகளுக்குத் தேவையான ஆயுதம், விமானம், ஏவுகணை தடுப்பு அமைப்பு ஆகியவற்றை வாங்க முக்கியத்துவம் வழங்கப்படும். நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

இந்த நிலையில் இந்தியா, சீனா பிரச்சனை, ராணுவத் தாக்குதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், இந்திய-சீன ராணுவ வீரர்களுக்குள் 50 நாட்களாக கைகலப்பு, சச்சரவு. ‘நம் பிரதமர் இதுபற்றி மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை’ என்றால், ‘நீ தேசத் துரோகி’ என்கிறது பாஜக. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தேசமே ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறது, அவர்களின் பின்னால் நிற்கிறது. பாஜகவின் பின்னாலல்ல. 1960க்கு பிறகு இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே நேரடி மோதல் இல்லை. 1975இல் சீனத் தாக்குதலுக்கு 4 இந்திய வீரர்கள் இறந்தனர். எல்லையில் சில கைகலப்புகள் நடந்திருந்தாலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அது உயிரிழப்புவரை சென்றுள்ளது. விலைமதிப்பற்ற நம் ராணுவ வீரர்கள் 20 பேரை இழந்துள்ளோம் என்றும், சீனாவுடனான மோதலில் நம் வீரர்களிடம் ஆயுதம் இருந்தது. ஒப்பந்தத்துக்குப் பணிந்து அவற்றைப் பயன்படுத்தவில்லை’ என்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். இதுதான் ‘ராணுவ ஒழுங்கு’. இத்தியாகத்துக்கு ஈடே கிடையாது. இதையும் பாஜகவினர் தங்களின் தியாகம் போல் பேசுவது அவ்வீரர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மோடி, 6 ஆண்டுகளில் சீன அதிபரை 18 முறை சந்தித்துள்ளார், 5 முறை சீனா சென்றுள்ளார். 70 ஆண்டுகளில் எந்தப் பிரதமரும் இத்தனைமுறை சீனா சென்றதில்லை. சீன அதிபரை இத்தனைமுறை சந்திக்காத, சீனா செல்லாத பிரதமர்களால் வளர்க்கப்பட்ட இருதரப்பு நல்லுறவை, பலமுறை சீனா சென்ற மோடியால் ஏன் பேணமுடியவில்லை? என்றும், ‘தற்சார்பு பொருளாதாரம்’ என்கிற மோடி அரசு, நம் ராணுவ வீரர்களைச் சீன வீரர்கள் தாக்கிய சில நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 13ஆம் தேதி அதே சீன நிறுவனத்துடன் 1,700 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடுகிறது. பாஜகவினர் இப்போது, ‘சீனப் பொருட்களைப் புறக்கணியுங்கள்’ என்கின்றனர். யார் உண்மையான தேசத் துரோகி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT