ADVERTISEMENT

திமுக பொதுக்குழு! துணைப் பொதுச்செயலாளர்களில் மாற்றம்!

11:41 AM Oct 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கடந்த 6 மாதங்களாக நடந்த திமுகவின் உள்கட்சித் தேர்தல் 99 சதவீதம் நடந்து முடிந்து விட்டது. இனி, திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான தேர்தல் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.

தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின். அதற்கான மனுத்தாக்கலை 7-ந் தேதி காலையில் தாக்கல் செய்கிறார். திமுகவின் சட்ட விதிகளின் படி மு.க.ஸ்டாலினின் மனு முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர், பொருளாளருக்குரிய மனுக்களும் ரெடியாகின்றன.

மேற்கண்ட பதவிகளுக்கு போட்டியிருக்காது என்பதால் போட்டியின்றி அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். இதன் மூலம், இரண்டாவது முறையாக தலைவராகிறார் ஸ்டாலின். குறிப்பாக, முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் போது ஸ்டாலின் தலைவராவதால் திமுகவினர் மிக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். தலைவர் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வருகிற 9-ந் தேதி நடக்கவிருக்கும் திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் இதற்காக ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடக்கும்.

அந்த வகையில், துணைப் பொதுச்செயலாளர்கள் நியமன விதிகளில் மாற்றம் கொண்டு வர கட்சி மேலிடம் திட்டமிட்டிருப்பதாக திமுக சீனியர்களிடம் எதிரொலிக்கிறது. குறிப்பாக, திமுகவின் தற்போதைய சட்டவிதிகளின் படி, 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 7-ஆக உயர்த்த திட்டமிடப்படப்பட்டுள்ளது.

இது குறித்து திமுகவில் நாம் விசாரித்தபோது, “திமுக சட்டவிதிகளின் படி 5 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் மகளிராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்டோர் இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். மற்ற மூவரும் பொது கேட்டகிரியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில், தற்போது, 5 துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய 5 பேர் இருக்கிறார்கள். இவர்களில் அந்தியூர் செல்வராஜ் தலித் பிரதிநிதித்துவத்திலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் மகளின் பிரதிநிதித்துவத்திலும் நியமிக்கப்பட்டவர்கள்.

மற்ற மூவரும் பொது கேட்டகிரியில் நியமிக்கப்பட்டாலும், ஆ.ராசா, தாழ்த்தப்பட்டோர் சமூகம் என்பதால் அவரை அந்த சமூகத்தினராகவே பார்க்கப் படுகிறார். அதாவது, 5 துணைப் பொதுச்செயலாளர்களில் தலித் சமூகத்துக்கு 2 பிரதிநிதித்துவமா? மற்ற சாதியினருக்கு என்ன வாய்ப்பு? என்றெல்லாம் சீனியர்களிடம் தொடர்ச்சியான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், மற்ற சமூகத்தினரை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படலாம்” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர்கள்.

துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்று மேலும் நாம் விசாரித்தபோது, “தற்போது இருக்கும் 5 துணைப் பொதுச்செயலாளர்களில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அந்த இடத்துக்கு ஒரு மகளிரை நியமிக்க வேண்டும். அந்த வகையில், அந்த இடத்துக்கு கனிமொழி மற்றும் கீதா ஜீவன் ஆகியோரிடையே போட்டி இருக்கிறது. இதைத் தவிர மேலும் சில மகளிர் வி.வி.ஐ.பி.க்களும் முயற்சியில் இருக்கிறார்கள்.

மகளிர் பிரதிநிதித்துவத்தை அடுத்து மற்ற 4 துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் தற்போது இருப்பவர்களே மீண்டும் நியமிக்கப்படுவார்கள். அதே சமயம், சுப்புலட்சுமி ஜெகதீசன் கொங்கு வேளாளர் என்பதால் அந்த சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது. அப்படி கொடுத்தால், வன்னியர் சமூகம், நாயுடு சமூகம் உள்ளிட்டவர்களிடம் அதிருப்தி உருவாகலாம். அதனால், கொங்கு வேளாளர் சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் போல, வன்னியர் மற்றும் நாயுடு இனத்துக்கும் பிரதிநிதித்துவம் வழங்கலாம் என யோசிக்கிறார்கள்.

அந்த வகையில், “துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 5-லிருந்து 7 ஆக உயர்த்தும் பட்சத்தில், கொங்கு வேளாளர் சமூகத்துக்கு 1 இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு சக்கரபாணி, சாமிநாதன் இடையே போட்டி உருவாகியிருக்கிறது. மீதமுள்ள 1 இடத்தை வன்னியருக்கு கொடுத்தால் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கும், நாயுடு சமூகத்துக்கு கொடுத்தால் அமைச்சர் எ.வ.வேலுக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள் திமுகவின் மேலிடத்தோடு தொடர்புடையவர்கள்.

துணைப் பொதுச்செயலாளர்கள் மட்டுமல்லாமல் துணை அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலோசித்து வருகிறது திமுக தலைமை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT