ADVERTISEMENT

கம்யூனிஸ்டுகளை ஒதுக்குகிறதா திமுக..? முத்தரசன் பரபரப்பு அறிக்கை..!

11:51 AM Mar 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்கான கூட்டணியை இறுதி செய்யும் இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து பயணிக்கின்றன. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதேபோல், திமுக கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகளுக்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்கு தொகுதிகள், அதாவது குறைந்தபட்சம் ஒவ்வொரு கட்சிக்கும் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், திமுக தரப்பில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 5 முதல் 6 சீட்டுகள்தான் தரமுடியும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ‘இவ்வளவு காலம் திமுக கூட்டணியில் இருந்த நமக்கு, திமுக ஒரு மரியாதைக்குரிய பேச்சுவார்த்தையை நடத்தவில்லை’ என ஆதங்கத்தோடு உள்ளார்கள். 3ம் தேதி இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றாக கூடி பேசியுள்ளார்கள். அதில், ‘இந்திய அளவில் மதசார்பற்ற ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என தொடர்ந்து நாம் குரல் கொடுத்து வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தில் திமுக தலைமையில் நீண்டகாலமாக பயணித்து வந்தோம். அரசியலில் தேர்தல் நிலைப்பாடு மிக முக்கியமான ஒன்று. அந்த அளவில் தொடர்ந்து நாம் பெற்றுவந்த மரியாதைக்குரிய இடங்களைப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் நமக்கான மாற்று நிலையை எடுக்கலாம்’ என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளார்கள். ஆனாலும் இன்னும் காலம் இருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம். திமுக நமக்கான மரியாதைக்குரிய இடங்களை வழங்கும்’ என அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசியுள்ளார்கள். இறுதியில் இந்தத் தேர்தலில் நாம் போட்டியிட்டு, வெற்றிபெற்று, ஓரிரு இடங்களைப் பெறுவது மட்டுமே லட்சியம் இல்லை. நமது நோக்கம், இந்தத் தேர்தலால் சிதைந்துவிடக்கூடாது என மூத்த நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதன் அடிப்படையில், ‘திமுக இனிமேல் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், பேரம் பேசுவது இருக்கக் கூடாது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 10 இடங்களை ஒதுக்குவதாக இருந்தால் பேசுவோம். இல்லையென்றால் தார்மீக அடிப்படையில் நாம் இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமோ, அதை தெரிவிப்போம் அல்லது மாற்று நடவடிக்கையாக, எந்த அணியில் நாம் இணைவது என்பதும் பேசி முடிவு செய்வோம்’ என இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 4ம் தேதி காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற உள்ளது. அதில் பேசக்கூடிய முக்கிய விஷயம், ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கான மரியாதைக்குரிய இடங்களை திமுக தர வேண்டும். இல்லையெனில் இந்தத் தேர்தலில் நாம் மக்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரத்தை செய்வோம், தேர்தல் அரசியல் முக்கியமல்ல, கட்சிக்கான மரியாதைதான் முக்கியம்’ என கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளார்கள். இதன் மூலம் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தர வேண்டிய மரியாதையைக் குறைத்து மதிப்பிடுகிறது என வெளிப்படையாக தெரிகிறது. இதனால், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் திமுக ஒதுக்குகிறது என அக்கட்சிகளின் நிர்வாகிகள் மனக் குமுறலுடன் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ''தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் - தி.மு.க.வுக்கு இடையில் சிக்கல் நிலவுவது போலவும், பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படுவது போலவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன.

அத்தகைய செய்திகளில் உண்மை இல்லை என்பதுடன், அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்திக்கொள்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக தொடர்கிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT