ADVERTISEMENT

“இரயில்வே இருப்பு பாதை அமைப்பேன்” - தி.மு.க வேட்பாளர் அருண் நேரு உறுதி

11:16 AM Apr 17, 2024 | mathi23

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அருண் நேரு போட்டியிடுகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி கிராமம், கிராமமாக சென்று வாக்குகள் சேகரித்தார். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இன்று காலையில் லால்குடி ரவுண்டானாவில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் மண்ணச்சநல்லூர் தொகுதி, முசிறி தொகுதி, குளித்தலை தொகுதி, துறையூர் தொகுதி ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரையில் பிரச்சாரத்தை இன்று மாலை நிறைவு செய்கிறார். சென்ற இடமெல்லாம் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவுக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசியதாவது, “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலுள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழகத்திலேயே 3ஆவது பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் கதவணையிலிருந்து காவிரி உபரி நீரினை குழாய் மூலம் கொண்டு செல்ல கடுமையான முயற்சி மேற்கொள்வேன். தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் பெண்கள் அரசு கலை மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்வேன்.

ADVERTISEMENT

செட்டிக்குளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு பெற முழுமுயற்சி செய்வதோடு, ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்திடவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வேன். மண்ணச்சநல்லூர் அரிசி, முசிறி கோரைப்பாய், தொட்டியம் வெற்றிலை போன்ற விளைப்பொருட்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கொண்டு விற்பனை செய்ய தகுந்த நடவடிக்கை மேற்கொள்வேன். பெரம்பலூர் தொகுதி மக்களின் 75 ஆண்டு கால கனவுத்திட்டமான அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக துறையூர், தாத்தையங்கார்பேட்டை, நாமக்கல் வரை 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரயில்வே இருப்பு பாதை அமைக்க கடுமையாகப் போராடி தமிழகத்திலேயே இருப்பு பாதை இல்லாத பகுதி என்ற பெயரினை நிச்சயம் மாற்றி காட்டுவேன்

பெரம்பலூர் தொகுதியில் சிறு, குறு தொழில் மையங்கள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு விரைவில் கிடைக்க ஆவண செய்வேன். புளியஞ்சோலை, பச்சைமலை, ரஞ்சன்குடி கோட்டை போன்ற சுற்றுலா தலங்கள் பகுதிகளுக்கு பொது மக்கள் சுலபமாக சென்று வரத் தகுந்த வழித்தடம் மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர பாடுபடுவேன். ஆன்மீகத்தின் அடையாளமாகத் திகழும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், திருப்பட்டூர் பிரம்மா கோவில், வெங்கனூர் விருதாச்சலேஸ்வரர் திருக்கோவில் போன்ற புனிதத் தலங்களுக்கு தினந்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து தர முயற்சிகள் மேற்கொள்வேன். தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து மக்களுக்கு பெற்றுத் தர ஆவண செய்வேன்.

இலால்குடி இரயில்வே மார்க்கமாக செல்லும் சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய அதிவிரைவு இரயில்கள் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும் வசை இலால்குடி இரயில் நிலையத்தில் நின்று செல்ல தகுந்த நடவடிக்கை எடுப்பேன். குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும், மருதூர் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டவும், குளித்தலை - மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலம் அமைக்கவும் தகுந்த முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்வேன். மொத்தத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மக்களுக்கு கிடைத்திட பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிப்பேன். எனவே, அனைவரும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT