ADVERTISEMENT

"அவர் பேசுனதை சொன்னா அசிங்கமாயிடும்..." - துரைமுருகன் சந்திப்பு குறித்து சுதீஷ்  

01:58 PM Mar 07, 2019 | vasanthbalakrishnan

திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்ததாகவும் அப்போது கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தேமுதிகவுக்கு கொடுக்க இனி சீட்டுகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். ஒரு பக்கம் அதிமுகவுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடந்துவரும் வேளையில், இன்னொரு புறம் திமுகவுடன் நடந்த இந்த சந்திப்பு குழப்பத்தையும் கேள்விகளையும் ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தில் விமரசிக்கப்பட்ட இந்த சந்திப்பு குறித்து விளக்கமளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் தேமுதிக துணைப் பொது செயலாளர் சுதீஷ்.

ADVERTISEMENT



"எங்கள் மாவட்ட செயலாளர் அனகை முருகேசனும் இளங்கோவனும் தங்கள் சொந்த வேலையாக திமுக பொருளாளர் அண்ணன் துரைமுருகனை சந்தித்தனர். ஆனால், பத்திரிகைகள் கூட்டணி விஷயமாக சந்தித்ததாக செய்தி வெளியிட்டிருக்கின்றன. உண்மை அதுவல்ல என்று விளக்கவே இந்த ப்ரெஸ் மீட்" என்று சுதீஷ் கூற, செய்தியாளர்கள், "நீங்கள் துரைமுருகனை சந்தித்தாகக் கூறினாரே?" என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, "நானும் துரைமுருகனும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவரும் நானும் சந்திப்பது இன்று நேற்று நடப்பதல்ல. அடிக்கடி நாங்கள் சந்திப்போம். ஆனால், இப்போது நாங்கள் சந்திக்கவில்லை. கடந்த வாரத்தில் கூட்டணி குறித்து பேசினோம். ஆனால், இப்போது நான் அவரை சந்திக்கவில்லை. அப்படி சந்தித்தாலும் கட்சி, அரசியல் நாகரிகம் கருதி நாங்கள் சந்திப்பின் போது நடந்ததை வெளியே கூற மாட்டோம். நாங்கள் கேப்டன் வழி வந்தவர்கள். ஆனால், துரைமுருகன் வந்த வழி வேறு. எங்கள் சந்திப்புகளின் போது அவர்கள் கட்சித் தலைமை குறித்து அவர் பேசியதையெல்லாம் இங்கே சொன்னால் அசிங்கமாகிவிடும்" என்று கோபமாகப் பேசினார்.

கேள்விகள் அதிகரிக்க அதிகரிக்க சற்று டென்ஸனான சுதீஷ், செய்தியாளர் சந்திப்பை மிகச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT