ADVERTISEMENT

“இது மூக்கறுக்கிற கதை...” - மத்திய அரசின் செயலுக்கு திருமாவளவன் கண்டனம்

10:42 AM May 24, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. திமுகவும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “சாவர்க்கர் பிறந்தநாள் மே 28 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைப் புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை நடத்துகிறார். இது சிங்காரித்து மனையில் குந்த வைத்து மூக்கறுக்கிற கதையாகவுள்ளது. இதனை விசிக சார்பில் கண்டிக்கிறோம். அத்துடன் இந்த நிகழ்வைப் புறக்கணிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT