ADVERTISEMENT

அதிமுக கூட்டணிக்கு வில்லங்கம் வெளியில் இல்லை! -பிரச்சார சொதப்பலால் வேட்பாளர்கள் திக்திக்!

10:11 PM Mar 30, 2019 | cnramki

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கட்சி தொடங்கியிருக்கும் டிடிவி தினகரன், கமல்ஹாசன் போன்றவர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சில இடங்களில் அதிமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் பிரச்சாரத்தில் சொதப்புவது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் ஆகிவிடுகிறது. சாம்பிளுக்குச் சில..

ADVERTISEMENT

ஓட்டு போட்டா போடுங்க; போடாட்டி போங்க!

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, ஏமூர் புதூர் காலனி பகுதியில் 2 நாட்களுக்கு முன்னர் வாக்கு சேகரித்தார். அப்போது, அந்தப் பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்று புகார் தெரிவித்தனர். அதற்கு, “கண்டிப்பாக நான் ஜெயித்து வந்தவுடன் நிறைவேற்றித் தருகிறேன்” என்றார் தம்பிதுரை. பதிலுக்கு மக்கள் "5 வருஷமாக நீங்க தானே எம்.பி. ஓட்டுக் கேட்க மட்டும் இப்ப வந்திருக்கீங்க" என்று வாக்குவாதம் செய்தனர்.
இதனால் டென்ஷன் ஆன தம்பிதுரை, "நீங்க ஓட்டு போட்டா போடுங்க; போடாட்டி போங்க. அதுக்காக, உங்க கைல, காலுல விழ முடியாது. நான் பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கேன். இதற்கு முன் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?" என்று ஆவேசம் காட்டினார்.


ஆப்பிளாக மாறிய மாம்பழம்!

7 தொகுதிகளைக் கேட்டு வாங்கிய உற்சாகத்தில் இருந்த ராமதாசுக்கு, திண்டுக்கல் தொகுதியை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டது அதிமுக. அங்கு பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆத்தூரில் நடந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த மேடையில் திண்டுக்கல் சீனிவாசன், "வேட்பாளர் ஜோதிமுத்துவையும், பாமகவையும் வானளாவப் புகழ்ந்துவிட்டு, 'ஆப்பிள்' சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள்" என்றார். அருகே இருந்தவர்கள் சுட்டிக் காட்டிய பிறகே, பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டுப் போடச் சொன்னார்.

அதிமுக எம்பி. நல்லவர் தான்! ஆனால்..?

திருவள்ளூர் தொகுதியில் மூன்றாவது முறையாகக் களம் இறங்கி உள்ளார் சிட்டிங் அதிமுக எம்பி. வேணுகோபால். கும்மிடிப்பூண்டியில் இவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்குக் கூட்டணிக் கட்சியான பாமக ஏற்பாடு செய்தது. எம்.பி வேணுகோபாலும் உற்சாகமாகக் கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய பாமக துணை பொதுச் செயலாளர் செல்வராஜா, "நாம நமக்குள்ளே தான் இப்போ பேசுறோம். எம்.பி நல்லவர் தான். 10 வருஷமா அவரு தான் எம்.பியாக இருக்கிறார். ஆனா.. தொகுதி பக்கமே அவரை பார்க்க முடியல.'' என கூட்டத்திற்குள் கட்டுச் சோறை அவிழ்த்த கதையாக, உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

தேவை மரியாதை!

மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பால் அறிமுகக் கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான த.மா.கா நிர்வாகிகள் பெயரை அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் உச்சரிக்கவில்லை. அதனால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட த.மா.கா நிர்வாகிகள் மனோகர் உள்ளிட்ட சிலர், ஊடகத்தினர் முன்பாகவே கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

எந்தக் கட்சி எவ்வளவு வாக்குகளைப் பிரிக்கப் போகிறது? அதனால், யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்று புரியாமல் தவிக்கும்போது, பிரச்சாரத்தில் சொதப்புவதும், காலை வாறுவதும், முறுக்கிக்கொள்வத அதிமுக கூட்டணி வேட்பாளர்களை திக்திக் மனநிலையில் வைத்திருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT