ADVERTISEMENT

“தி.மு.க. வென்றதும் ஒ.பி.எஸ். சொத்துகள் அரசுடைமை ஆக்கப்படும்!” - தங்க தமிழ்ச்செல்வன்!

06:08 PM Jan 08, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளரான கூடலூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் அருண்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு ரூ.2 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக மலையாள பத்திரிகையில் செய்தி வந்ததை வைத்துக்கொண்டு, தங்க தமிழ்ச்செல்வன் அவதூறு பரப்பிவருகிறார். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்த தங்க தமிழ்ச்செல்வன், சென்னையில் வீடு, கம்பத்தில் வீடு, கடைகள் உட்பட சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அதோடு மேகமலையில் அவருக்கு சொத்து இருந்தது, அதை என் பெயரில் எழுதி வைத்திருந்தார். நான், அ.தி.மு.க.வுக்கு வந்தபோது அதை அவருடன் இருக்கும் வேறு ஒரு நபருக்கு பவர் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். இப்படி தங்க தமிழ்செல்வனுக்கு ரூ.100 கோடி வரை சொத்துகள் இருக்கிறது. அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதனால் ஓ.பி.எஸ். மேல் அவதூறு பரப்புவதை இனிமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அதிரடியாகக் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, “துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் தொகுதியான போடியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், அந்த ரூ.2 ஆயிரம் கோடி சொத்து விவரங்களைப் பேசினேன். அதற்கு ஓ.பி.எஸ். எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதுபோல் தேனி மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து இருக்கிறார்.


ஓடிக்கொண்டிருந்த ஆலைகளை மூடவைத்து அந்த ஆலைகளை எல்லாம் பினாமிகள் பெயரில் வாங்கி இருக்கிறார். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார், தனி விமானம் மூலம் மொரிஸியஸ், மாலத்தீவு நாட்டுக்குச் சென்று கொள்ளையடித்த பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார் என்றும் சொன்னேன் அதற்கும் பதில் சொல்லவில்லை. அதேபோல் லட்சுமிபுரம் கிணறு பிரச்சனையின்போது ஆயிரம் ஏக்கர் வாங்கி இருக்கிறார் என்று சொன்னேன். ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜாவும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஸ்கூல் உள்பட 10 ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். இப்படி ஓ.பி.எஸ். குடும்பமே சொத்துகளை வளைத்துப் போட்டிருக்கிறது. இது எதற்குமே ஓ.பி.எஸ். எந்த ஒரு பதிலும் இதுவரை சொல்லவில்லை.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார். அதன் மூலம் ஓ.பி.எஸ். சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஓ.பி.எஸ். படு தோல்வியைத் தழுவுவார்.

கூடலூரைச் சேர்ந்த அருண்குமார், எனக்கு நெருங்கிய நண்பர். தே.மு.தி.க.வில் கூடலூர் சேர்மனாக வெற்றிபெற்றவரை ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் சேர்த்ததே நான்தான். அதன்பின் அ.ம.மு.க.விற்கு நான் போனபோது என்னுடன் வந்தவர், தி.மு.க.வுக்கு நான் வந்தபோது, அவர் ஓ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். பதவிக்காக என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருகிறார். அது முற்றிலும் பொய். என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், ஓ.பி.எஸ். தூண்டுதலின்பேரில், எனது நண்பர் அருண்குமார் பேசியதற்கு சட்ட ரீதியாக தலைமையின் அனுமதியோடு வழக்குத் தொடர இருக்கிறேன்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT