ADVERTISEMENT

'பதவியை பறித்திருப்பது ஜனநாயக படுகொலை' - சீமான் கண்டனம்

09:59 PM Mar 24, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து மக்களவை இணைச் செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 102(1)(e) விதிகளின்படி, அவர் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து அதாவது மார்ச் 23, 2023 முதல் லோக்சபா உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 'ராகுலுக்கு சிறைத் தண்டனை விதித்து அவருடைய பதவியை பறித்திருப்பது ஜனநாயக படுகொலை. தனது அதிகார பலத்தை கொண்டு பாஜக அத்துமீறல் செய்து, அடாவடித்தனம் செய்கிறது. பாசிச பாஜகவின் முகத்திரையை கிழித்தெறிய ஜனநாயக ஆற்றல்கள் ஒன்று திரண்டு வரவேண்டும்' என சீமான் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT