Skip to main content

பா.ஜ.கவுக்கு தாவும் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ! பெரும் பண பேரம் நடப்பதாக தகவல்!

Published on 25/12/2022 | Edited on 25/12/2022

 

Tamil Nadu Congress MLA gonna join BJP!

 

''பாரத் ஜோடோ யாத்ரா'' அதாவது ''இந்திய ஒற்றுமை பயணம்'' என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது நடைப் பயணத்தை தொடங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராகுல்காந்தி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் நடைபயணம் காஷ்மீரில் முடிவடைகிறது. 

 

ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் வழிநெடுக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று வருகின்றனர். குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலை தொண்டர்களும், நிர்வாகிகளும் பார்த்துக்கொள்வார்கள் என்று பிரச்சாரத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுக்காமல் இந்த யாத்ரைவை தொடர்ந்தார் ராகுல்காந்தி. 

 

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு புது உத்வேகத்தை ராகுலின் ''பாரத் ஜோடோ யாத்ரா'' அளிக்கும் என்று அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுமார் 3 மாதத்திற்கும் மேலாக ராகுல் காந்தியின் ''பாரத் ஜோடோ யாத்ரா'' நடந்து கொண்டிருக்கிறது.  

 

Tamil Nadu Congress MLA gonna join BJP!

 

நேற்று தலைநகர் டெல்லிக்குள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நுழைந்ததும், இந்த யாத்திரையில் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரைக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் பெரும் அளவில் திரண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த அளவு இந்த யாத்ராவுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்பார்க்கவில்லை.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல், இந்த யாத்ராவில் பங்கேற்றார். முன்னதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார். கடந்த மாதம் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல் கலந்து கொண்டது, காங்கிரஸை முக்கிய அங்கமாகக் கொண்ட தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு விரைவில் புதிய கூட்டணி அமையும் என்பதைக் குறிக்கிறது என்ற விவாதம் தொடங்கியுள்ளது.


வலுவாக இருக்கும் திமுக கூட்டணி வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திமுக கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் தாம் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து இருப்பது, வெற்றிக்கு உதவாது என்று நினைப்பதுடன், திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாஜக நினைக்கிறது. 


இந்தநிலையில்தான் ராகுல்காந்தி வாக்கிங் போகிறார் என தமிழக பாஜகவினர் கிண்டல்களையும் விமர்சனங்களையும் வைத்தனர். தமிழக பாஜகவில் தற்போது நிலவி வரும் ஆடியோ, வீடியோ விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் டெல்லி பாஜக கோபம் அடைந்துள்ளது. பொதுமக்களிடம் நம்பிக்கையையும் பெற முடியவில்லை. இந்தநிலையில்தான் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவரை பாஜகவுக்கு கொண்டு வந்துவிட்டால் டெல்லியில் நல்ல பெயர் எடுக்கலாம் என நினைத்து அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. பெரும் பண பேரம் இதற்காக பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி அரசியலை பயன்படுத்தி இந்த பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. 


இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் இருந்து ஒரு சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏவை பாஜகவுக்கு கொண்டுவருவதோடு, அந்த எம்.எல்.ஏவை காங்கிரஸ் மேலிடத்திற்கு எதிராக பேச வைக்க வேண்டும் என்றும் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. தமிழக பாஜக மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை இதன் முலம் திருப்புவதோடு, ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா பெரிய வெற்றியை பெறவில்லை என்பதை நிருபிக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்