ADVERTISEMENT

இந்த ஆராய்ச்சியெல்லாம் உங்களுக்கு எதுக்கு? திருநாவுக்கரசர் பேட்டி

02:41 PM Feb 04, 2019 | rajavel



டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. காங்கிரஸ் கட்சியில் நான் சேருவதற்கு காரணமே ராகுல் காந்திதான். அவரை நம்பிதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமித்து பெருமைப் படுத்தினார். ஆந்திரா, தெலுங்கானா மாநில பொறுப்பாளராக நியமித்தார். அதன் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமித்தார். ஏறக்குறைய பலபேர் அந்த பொறுப்பை விரும்பினார்கள். கேட்டார்கள். இருந்தாலும் வரலாற்று சிறப்புமிக்க, தமிழ்நாட்டின் மிகப்பெரிய தலைவர்களெல்லாம் வகித்த அந்த உயர்ந்த பதவியை எனக்கு தந்து கட்சிக்காக பாடுபடக்கூடிய ஒரு வாய்ப்பை தந்தார். இதற்கெல்லாம் ராகுல் காந்திக்கு நன்றியை தெரிவித்தேன்.

ராகுல்காந்திதான் என்னை தலைவராக நியமித்தார். தலைவர் பதவியில் இருந்து மாற்றவோ, எடுக்கவோ ராகுல்காந்திக்கு முழு அதிகாரம் உண்டு. அவர் என்ன முடிவு எடுத்தாலும், நான் அவர் மேல் கொண்டிருக்கின்ற அன்பால், மதிப்பால், பாசத்தால், அதுமட்டுமல்ல சோனியாகாந்தி மீதுள்ள பக்தியால் என் வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல, என் சந்ததியினரும் கூட காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி பாடுபடுவோம்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காகவும், வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெறவும் என்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, நான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது எப்படி கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டேனோ, அதைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன். ராகுல்காந்தி பிரதமராக வருவதற்காக நான் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.

ராகுலிடம் என்ன பேசினீர்கள்?

காங்கிரசில் சேர்ந்த எனக்கு செயலாளர், தலைவர் பதவி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தலைவராக இரண்டரை வருடம் தொடர்ந்ததே சாதனைத்தான். நான் இரண்டரை வருடம் தலைவராக இருந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்.

தலைவர் பதவி மாற்றத்திற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

புதிய தலைவரை நியமித்துள்ளார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தலைவரை மாற்றுவதற்கு நான் காரணம் கேட்கத்தேவையில்லை. அவர் காரணம் சொல்லத்தேவையும் இல்லை. ராகுல்காந்தி மீது வைத்துள்ள மரியாதை காரணமாக அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்கிறேன்.

நீங்கள் வெளிநாடு சென்றபோது ரஜினியை சந்தித்ததாகவும், அதனால்தான் உங்களை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாகவும் சொல்கிறார்களே?

ரஜினி என்னுடைய 40 வருடகால நண்பர். அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காபோக வேண்டியதில்லை. அவர் இருக்கும் இடத்திற்கே போய் பார்க்கலாம். அவ்வப்போது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் அவர் அரசியல் கட்சி தொடங்கவும் இல்லை. இதெல்லாம் தவறான செய்திகள். அமெரிக்காவில் இருக்கும் எனது மகள், மருமகன், பேரன், பேத்தியை பார்க்க சென்றேன். என் மீது எந்த புகாரும் இல்லை. இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தவர்களை நீக்கிவிட்டு, பின்னர் அவர்களை அழைத்து அகில இந்திய தலைவர் பேசியிருக்கிறாரா சொல்லுங்கள். அவர் என் மீது அன்பு வைத்துள்ளார். நான் அவரை சந்தித்து பேசிவிட்டு வருகிறேன்.

என்ன பேசினீர்கள்?

எங்களுக்குள்ள என்ன பேசிக்கொண்டோம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. கட்சிக்காக என்ன செய்ய வேண்டும். எப்படி செயல்பட வேண்டும் என எனக்கு வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்.

தலைவர் பதவிக்கு பதில் வேறு ஏதேனும் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தாரா?

அவர் என்ன கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு பணியாற்றுவேன். சாதாரண தொண்டனாக 5 ரூபாய் உறுப்பினராக இருந்தும் பணியாற்றுவேன். அவர் என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன். நாங்கள் என்ன பேசிக்கொண்டோம் என்பதை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. அதனை சொல்லுவதும் நாகரீகமும் கிடையாது.

தொண்டர்களை அரவணைத்துப்போகவில்லை என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றவர்களின் எதிர்ப்பு இருந்தது. அதன் காரணமாக மாற்றம் இருந்திருக்குமா?

தமிழ்நாடு முழுவதும் நான் தொண்டர்களை அரவணைத்து போனேனா இல்லையா என்று சர்வே பண்ணுங்கள். அதில் எனக்கு எதிராக இருந்தால் பதில் சொல்கிறேன்.

தலைவர் பதவி மாற்றத்தில் ப.சிதம்பரத்தின் தலையீடு இருப்பதாக நினைக்கிறீர்களா? அதுபோன்ற பேச்சு நிலவுகிறது...

ப.சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் இல்லையே. அவர் எப்படி என்னை நீக்க முடியும். அவர் என்னுடைய நண்பர்.

அழகிரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளர். ஆகையால் ப.சிதம்பரத்தின் அழுத்தத்தினால்தான் தலைவர் பதவி மாற்றப்பட்டுள்ளது என்று பேசப்படுகிறதே?

ராகுல் காந்திக்கு அழுத்தம் கொடுத்து, நிர்ப்பந்தப்படுத்தும் சக்தி இந்த உலகத்தில் யாருக்கும் கிடையாது.

அமமுகவுடன் இணைந்து போட்டியிலாம் என்று நீங்கள் சொன்னதாக கூறப்படுகிறதே?

அமமுக என்ன கட்சி அது. நாங்கள்தான் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று சொல்கிறேனே.

தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ராகுல்காந்தி இந்த இடத்தில் போட்டியிடுங்கள் என்று சொன்னால் போட்டியிடுவேன். போட்டியிட வேண்டாம் என்று சொன்னால் போட்டியிடமாட்டேன்.

திருநாவுக்கரசர் எப்போதுமே சந்தோஷமாக பேட்டி அளிப்பார். ஆனால் இன்று அழுத்தமாக, கோபமாக இருப்பதாக தெரிகிறதே?

சந்தோஷமாக பேட்டி கொடுக்கிறேன். பனியில் தொண்டை கட்டியிருக்கிறது. நிறைய நண்பர்கள் போன் செய்கிறார்கள். வருத்தப்படாதீர்கள் என்பார்கள். நான் அவர்களை வருத்தப்படாதீர்கள் என்பேன். பனியில் தொண்டை கம்மியிருக்கலாம். மனசு உற்சாகமாக இருக்கிறது.

இன்றைய சந்திப்புக்கு நீங்கள் அப்பாயின்மென்ட் கேட்டீங்களா? ராகுல் கூப்பிட்டாரா?

நான் அவரை பார்த்துவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு இந்த ஆராய்ச்சியெல்லாம் உங்களுக்கு எதுக்கு. தமிழ்நாட்டில் நான் தலைவராக இருந்த காலத்தில் எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒத்துழைப்பு கொடுக்காத தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா?

எனக்கு ஒத்துழைப்பு கொடுக்காத தலைவர்கள் யாரும் கிடையாது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?.

அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இன்று உங்களை ராகுல் காந்தி அழைத்து வருத்தப்படாதீர்கள். தேர்தல் வர இருப்பதால் கோஷ்டியாக செயல்படக்கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் திருநாவுக்கரசர் உள்பட என்று அறிவுரை வழங்கினாரா?

தமிழ்நாட்டில் ஒரே கோஷ்டிதான். தலைவர் ராகுல்காந்தி கோஷ்டிதான். எல்லோரும் தேர்தலில் ஒற்றுமையாக பணியாற்றுவோம். நான் யாரையும் வாழ்க்கையில் எதிரியாக நினைத்தது இல்லை. 42 வருடமாக அரசியலில் இருக்கிறேன் எனக்கு யாரையும் போட்டியாக நினைத்தது இல்லை. யாருக்கும் நான பயந்ததும் கிடையாது. என் கடமையை செய்தேன். செய்கிறேன். செய்வேன்.

புதிய தலைவருக்கு என்ன சொல்கிறீர்கள்?.

புதிய தலைவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய ஒத்துழைப்பு பரிபூர்ணமாக உண்டு.

புதிய தலைவருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?

அவருக்கு உங்கள் மூலமாகத்தான் ஆலோசனை சொல்லணுமா?. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கொள்வோம். அப்போது சொல்லிக்கொள்வேன். இவ்வாறு கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT