ADVERTISEMENT

“ஆளுநர் ரவி அவர்களே தமிழ்நாடு அமைதி கொள்ளாது” - முத்தரசன்

02:39 PM Jun 16, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் எதேச்சதிகார நடவடிக்கையை கண்டிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர். ஆர்.என். ரவி அவர்கேளே, தமிழ்நாடு அமைதி கொள்ளாது எச்சரிக்கை செய்கிறோம். பாஜக மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசை குறி வைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கும் சென்றுள்ளது.

‘எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயார்’ என அவர் அறிவித்த நிலையிலும் சட்ட முறைகளை நிராகரித்து, மனித உரிமைகளை அலட்சியப்படுத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு நெட்டித் தள்ளப்பட்டுள்ளது. அமைச்சர், உயிருக்குப் போராடி வரும் நிலையில் அவரது சட்டப்பூர்வ கடமைகளை கவனிக்கும் பொறுப்பை அமைச்சரவை உறுப்பினர்களிடம் முதலமைச்சர் பிரித்து வழங்கியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் முதலமைச்சர் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் சட்டப்படியான கடமைப் பொறுப்பாகும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் வன்மத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

தற்போது தமிழ்நாடு மக்களைத் தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்ட குறிப்புகளுடன் முதலமைச்சர் கடிதத்தைத் திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநரின் அப்பட்டமான அதிகார அத்துமீறலையும், மலிவான அரசியல் நடவடிக்கையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. திரு.ஆர்.என். ரவி ஆர்எஸ்எஸ் + பாஜக ஆதரவு அரசியலை ஆளுநர் மாளிகையில் இருந்து நடத்துவதை தமிழ்நாடு வினாடிப் பொழுதும் அனுமதிக்காது என்பதை உணர வேண்டும் என எச்சரிக்கை செய்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT