ADVERTISEMENT

பற்றி எரியும் நகரம்; மணிப்பூர் சென்றுள்ள அமித்ஷா முக்கிய முடிவு 

11:49 AM Jun 01, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 70 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக சில நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மணிப்பூர் மாநிலத்திற்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், சாலை போக்குவரத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரம் நடைபெற்ற இடத்தில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அவ்வப்போது கலவரங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இந்தக் கலவரங்களின் ஒரு பகுதியாக இரண்டு நாட்களுக்கு முன்பு, கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தத் தாக்குதலில் 30 கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை மணிப்பூர் சென்றார். அங்கு இம்பாலில் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்குடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கும் என அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசும் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். தற்போது வரை மணிப்பூர் கலவரத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு நாளை நிவாரணம் அறிவிக்கப்படும் என்றும் அமித்ஷா அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று தலைநகர் இம்பாலில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இரு சமூக பிரதிநிதிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மாநிலக் காவல்துறை, மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அவர், “மணிப்பூரில் அமைதி மற்றும் வளத்தை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாகும். அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT