ADVERTISEMENT

சீமான் மீது போட்ட வழக்கைக் கைவிட வேண்டும்: பெ. மணியரசன் 

10:33 AM Oct 17, 2019 | rajavel

ADVERTISEMENT

சீமான் மீது பதிவு செய்த வழக்கைக் கைவிடுமாறு பெ. மணியரசன் முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் 12.10.2019 அன்று சொற்பொழிவாற்றும் போது, முன்னாள் தலைமை அமைச்சர் இராசீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை ஆதரித்துப் பேசியது சரியல்ல; அவ்வாறான பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.




சீமானின் இந்தப் பேச்சைக் கண்டனம் செய்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அந்தப் பேச்சை வைத்துக் கொண்டு, அவர் மீது தேசத் துரோக வழக்குப் போட வேண்டும்; அவரைச் சிறையில் அடைக்க வேண்டும்; அவர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ச.க. – காங்கிரசு கட்சியினரும், திராவிடவாதத்தை ஆதரிக்கும் தனிநபர் சிலரும் கோருவது அவர்களின் மன வன்மத்தையே காட்டுகிறது.


மேற்படி பேச்சுக்காக காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை ஏற்று, தமிழ்நாடு காவல்துறை சீமான் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது சரியல்ல. எந்த சமூகப் பிரிவுக்கும் எதிராக வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சை சீமான் பேசவில்லை. எனவே, இ.த.ச. 153ஏ பொருந்தாது. இப்பேச்சால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இ.த.ச. 504 பிரிவும் பொருந்தாது.

கடந்த சில நாட்களாக – இச்சிக்கலை பூதமாகப் பெரிதுபடுத்தி தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க பா.ச.க.வினரும், காங்கிரசாரும் முனைகின்றனர். தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட வேண்டும்.

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றது சரி என்று கூறி, கோட்சேயை தலைவர் என்றும், ஈகி என்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. வடமாநில அரசுகளும் எடுக்கவில்லை. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களின் ஒளிப்படங்கள் “தியாகிகளாக” அமிர்தசரஸ் பொற்கோயிலில் பொறிக்கப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பா.ச.க.வினரும், காங்கிரசாரும் ஒரு தேர்தல் கூட்டத்தில் ஆவேசத்தில் பேசிய பேச்சுக்காக சீமானை சிறையில் தள்ள வேண்டுமென்றும், அவர் கட்சியை தடை செய்ய வேண்டுமென்றும் கூக்குரலிடுவது திட்டமிட்ட தமிழினத் துரோகச் செயலாகவே கருத வேண்டியுள்ளது.



தமிழ்நாடு காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை வைத்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத் தலைமை அலுவலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு விவரங்கள் கோரி கடிதம் அனுப்பியது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பலியாவது போல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்த வழக்கைக் கைவிடுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT