ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு

10:24 AM Feb 22, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். பிரச்சாரக் கூட்டத்தில் அருந்ததியர் குறித்து சர்ச்சையான கருத்தை சீமான் சொன்னதால் அவருக்கு எதிராக அச்சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரை கைது செய்யச் சொல்லியும் சாலைமறியல் செய்தனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் போது எக்கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் தேர்தல் அலுவலகத்தில் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும். எந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்ற விபரங்களை அளித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆம் தேதி உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதனை மீறி ஆலமரத்தெருவில் பரப்புரை மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைப் பெற்ற ஈரோடு தெற்கு காவல்துறையினர் 171F என்ற பிரிவின் கீழ் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT