ADVERTISEMENT

நுழைவுத்தேர்வு வேண்டாம்... சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் முன்மொழிவு

11:29 AM Apr 11, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி கடந்த 6 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது தொடர்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில், '2022-23 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை நடத்துவதற்காக நுழைவுத்தேர்வு நடத்துகிறது. ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நுழைவுத்தேர்வை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி இது.

நீட் தேர்வை போல் பொதுப்பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டிவிட்டு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பள்ளிகளின் மேம்பாடு சார்ந்த கட்டமைப்புகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். இதனால் மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை மாணவர்கள் நாடும் சூழல் உருவாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கையை வெகுவாக குறைத்துவிடும். ஒன்றிய அரசின் இந்தப்போக்கு மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே கருதுகிறோம்'' என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று கேள்வி நேரத்தின் மீதான விவாதத்தின் பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். பிளஸ் டூ மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்வது ஏற்புடையதல்ல. மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என வலியுறுத்தி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தின் முன்மொழிவை தமிழக வாழ்வுரிமை கட்சி, கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT