ADVERTISEMENT

''ஒவ்வொரு குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது...'' -அன்வர்ராஜா பேட்டி குறித்து சி.ஆர்.சரஸ்வதி!

06:53 PM Sep 18, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் இன்று (18.09.2020) ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளருமான அன்வர் ராஜா, "சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் வந்ததற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கிறாரோ அதனைப் பொறுத்துதான் அரசியலில் தாக்கம் இருக்கும்" என்றார்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று (18.09.2020) நடைபெற்று வந்த நிலையில், அன்வர் ராஜாவின் இந்தக் கருத்து அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, அ.ம.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையத்தளத்திடம் பேசுகையில், ''சசிகலா விரைவில் சிறையில் இருந்து வர வேண்டும் என்பது எங்கள் பிரார்த்தனை. சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்குதான் தெரியும். அவர்தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகுதான் நாங்கள் அதைப் பற்றி பேசுவோம்.

சிறையில் இருந்து அவர் வந்த பிறகு எடுக்கப்போகும் முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அன்வர்ராஜா சொல்லியிருக்கிறார். இப்போது பதவியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களில் 95 சதவீத பேர் சசிகலாவால், டி.டி.வி தினகரனால் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். இதனை அவர்களால் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.

அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுடன் 34 வருடங்கள் பயணம் செய்திருக்கிறார் சசிகலா. கஷ்டப்பட்ட காலத்திலும், வெற்றிபெற்ற காலத்திலும் உடனிருந்தவர். இது எல்லோருக்குமே தெரியும். சசிகலாவை அ.தி.மு.க.வில் இருப்பவர்களால் புறக்கணிக்க முடியாது. ஆகையால் இப்போது ஒவ்வொரு குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT