ADVERTISEMENT

''இருவரும் ஏற்கனவே இருந்த அதே சிறைக்கு செல்வார்கள்'' - எடப்பாடி பழனிசாமி பேச்சு

09:59 PM Feb 17, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி 17ஆம் தேதி கருங்கல்பாளையம் பகுதியில் பேசுகையில், "திமுக ஆட்சி பொறுப்பேற்று 21 மாதங்கள் ஆன நிலையில், எந்த பணியும் நடக்கவில்லை. வாக்கு கேட்க வரும் அமைச்சர்களை தடுத்து நிறுத்தி, எந்த பணி நடந்தது என வாக்காளர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்த பணத்தை கொடுத்து உங்களை ஏமாற்ற பார்க்கின்றனர். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் எச்சரிக்கை கொடுத்து சரியான பாடம் புகட்ட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்த போது எந்த வேட்பாளரும் வாக்காளரைச் சந்தித்து வாக்கு கேட்க முடியும். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆடு, மாடுகளை அடைப்பது போல் வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைக்கின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தும் தேர்தல் ஆணையம் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் கொட்டகைகளுக்கு நானே நேரில் சென்று வாக்கு சேகரிப்பேன் என அறிவித்தேன். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் போலீஸாரும் அங்கு சென்று வாக்காளர்களை பிரித்து அனுப்பியுள்ளனர்.

கூடாரங்களில் வாக்காளர்களை அடைத்து வைத்துவிட்டால் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியுமா? இனிமேல் எந்த பகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்தாலும், வேட்பாளரைக் கூட்டிக் கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் நானே அங்கு நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பேன். வாக்காளர்கள் எங்கு இருந்தாலும் நான் அவர்களைச் சந்திப்பேன். எனவே, இது குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து வருகின்றனர். மக்கள் வரிப்பணம் ரூபாய் 81 கோடியைப் பயன்படுத்தி, எழுதாத பேனா நினைவுச்சின்னத்தை கடலில் வைக்கவுள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேனா நினைவுச்சின்னத்தை கடலில் வைக்காமல் கலைஞர் நினைவிடத்திலோ, அறிவாலயத்திலோ வைக்க வேண்டியதுதானே?

2 கோடியில் நினைவுச்சின்னம் வைத்துவிட்டு, 79 கோடியில் ஏழை மாணவர்களுக்கு எழுதும் பேனா கொடுக்கலாமே. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத்தொகை வழங்குவதாக கூறியுள்ளார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாகக் கூறினார்கள். எனவே, வாக்கு கேட்க வரும் அமைச்சர்களிடம் 21 மாதத்திற்கு வர வேண்டிய 23 ஆயிரத்து 100-ஐ கொடுங்கள் என்று கேளுங்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சி வந்தபின் ஒரு பேச்சு என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஈரோட்டில் பிரச்சாரம் செய்த எம்பி கனிமொழி அதிமுக வெற்றி பெறாது என ஜோசியம் சொல்கிறார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தில்லுமுல்லு நாடகம் நடத்துகின்றனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த எம்.பி ராசா, எம்.பி கனிமொழி ஆகிய இருவரும் 2ஜி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வழக்கு தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் ஏற்கனவே இருந்த சிறைக்கு செல்வார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. 5 நாட்களில் 75 கொலை நடந்துள்ளது. பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அமைச்சர் நாசர் கல் எறிகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கையை வெட்டுவேன் எனப் பேசுகிறார்.

உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களே இப்படி நடந்து கொள்கின்றனர். போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. காவல்துறை சார்ந்தவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளபோது சாதாரண மக்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT