ADVERTISEMENT

“பி.டி.ஆர் எங்கு சென்றாலும் பாஜக எதிர்ப்பை பதிவு செய்வோம்..” - பாஜக சரவணன்

04:06 PM Aug 13, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்படி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை விமான நிலையம் திரும்பியபோது, பாஜகவினர் அவரது காரை வழி மறித்தனர். மேலும் ஒருவர் காலணியை அவர் கார் மீது வீசி எறிந்தார். இந்நிலையில், பாஜக கட்சி அலுவலகத்தில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், “அமைச்சர் பி.டி.ஆர், பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது இங்க வர்றிங்க என கேட்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது. ஒன்றிய அரசு என சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பி.டி.ஆர்-க்கு என்ன தகுதி உள்ளது. உயிரிழந்த லட்சுமணனுக்கு வைத்தியம் செய்துள்ளேன். அவர் குடும்பத்திற்கு என்னை தெரியும். திமுக கட்சியை வைத்து வெற்றி பெற்றவர். தனியாக நின்று செல்வாக்கோடு வெற்றி பெற்றவர் இல்லை. அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடட்டும். நானும் போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம்.

இவங்கள எதுக்கு உள்ள விடுறிங்க என பொதுமக்களை பார்த்து அமைச்சர் பி.டி.ஆர் கேட்டார். இவர் பேச்சை கேட்டு திமுகவே கொதித்து போய் உள்ளது. நிதியமைச்சரை பொறுப்பிலிருந்தே அகற்ற வேண்டும். பண்பாடு இல்லாத அமைச்சர் பி.டி.ஆர். தரம் தாழ்ந்து அமைச்சர் பி.டி.ஆர் இன்று நடந்து கொண்டார். நாங்கள் அந்த சம்பவத்தை செய்தோமா. அங்கே ஏராளமானோர் கூடியிருந்தனர். நீங்கள் சட்டரீதியாக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்களும் சட்ட ரீதியாக அணுகுகிறோம்.

பி.டி.ஆர் எங்கு சென்றாலும் பாஜக எதிர்ப்பை பதிவு செய்வோம். அறவழியில் போராடுவோம். நிதி அமைச்சர் பாஜக மீது கையை ஓங்கி இருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும். பாஜகவுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதால் இப்படி நடந்து கொண்டுள்ளார். சண்டை மூட்டிவிடும் கட்சி பாஜக அல்ல. அதிமுகவை பார்த்து வெளியே போக சொல்லாதவர். பாஜகவை காழ்ப்புணர்ச்சியோடு வெளியே போக சொல்லி உள்ளார்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT