Skip to main content

“குலத் தொழிலை உடைத்துக் காட்டியதே உயர்சாதியினர் தான்” - அமைச்சர் பி.டி.ஆர்.

 

 Minister P.T.R.Palanivel Thiagarajan says It is the upper castes who have done away with the clan industry

 

பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது, கைவினைத் தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டம் தொடங்கப்படுவதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இத்திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த ’விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வரும் குலக் கல்வித் திட்டத்தைக் கண்டிக்கும் வகையிலும், எதிர்க்கும் வகையிலும் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “கல்வி எல்லாருக்கும் முன்னேற்றத்தை தரும். இதில் மாற்றுக் கருத்துக்கு எந்தவித வாய்ப்பும் இல்லாத ஒரு உண்மை. அதை முதல் முதலில் அந்த அரிய வாய்ப்பை நமக்கு கொடுத்தவர்கள் உயர்சாதியினர்கள். 1928 ஆம் ஆண்டில் என் தாத்தா பி.டி.ராஜன் சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, அர்ச்சகர் என்ற ஒரு தொழில் அல்லது ஒரு சமுதாயம் ஏன் இருக்க வேண்டும்?  நாம் அனைவரும் இறைவனை பின்பற்றுகிறோம். வேண்டுமென்றால், அந்த பணியை செய்கிறோம். ஆனால், அந்த தொழிலுக்கு அப்படி என்ன ஒரு சிறப்பு இருக்கிறது? அதற்கு நீங்கள் மட்டும் தான் கருவறைக்கு சென்று பூஜை செய்ய முடிகிறது என்று கேள்வி கேட்டார்.

 

அப்பொழுது அவருடைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, எங்களுக்கு மட்டும் தான் ஸ்லோகம் தெரியும், சமஸ்கிருதம் தெரியும் அதனால் நாங்கள் மட்டும் தான் கருவறைக்குச் சென்று பூஜை செய்வோம் என்று எதிர்வினையாற்றினார்கள். ஏனென்றால், அவர்கள் மட்டும் தான் அதைப் படித்திருந்தார்கள். மேலும், வேறு யாருக்கும் படிப்பதற்கு வாய்ப்பு கொடுக்காததால் அப்படி கூறினார்கள். ஆனால், அதில் கூட இரண்டு பிழை இருக்கிறது.

 

சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு தான் இறைவனை பின்பற்ற வேண்டும் என்பது முதல் பிழை. நீங்கள் வேறு யாருக்கும் வாய்ப்பு கொடுக்காததால் அந்த மாதிரி கருவறைக்கு சென்று பூஜை செய்ய உருவாக முடியவில்லை என்பது இரண்டாவது பிழை. இரண்டாவது பிழையை இந்த ஆட்சி வந்த பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் திருத்தி காண்பித்துக் கொண்டிருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற கலைஞர் காலத்தில் இருந்து உருவாக்கி வந்த திட்டத்தை முழுமைக்கு கொண்டு வந்து, இன்று பலரை நியமித்திருக்கிறோம். அதில் நேற்று மூன்று பெண் அர்ச்சகர்களுக்கு நியமன பத்திரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது.

 

1920 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அதில், 3 சதவீதம் மக்கள் தொகையை கொண்ட ஒரு சமுதாயம், முன்சிஃப் பதவியில் 40 சதவீதமும், அரசு பணியில் 50 சதவீதமும், மருத்துவத் துறையில் ஒரு பெரும்பான்மை கொண்ட மக்கள் என்று எப்படி இருக்க முடியும் என்று கேட்டார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு மட்டும் தான் கல்வி வாய்ப்பு கிடைக்க பெற்றது. அதை திருத்தும் வகையில் தான் கட்டாயக் கல்வி, அதே போல் இட ஒதுக்கீடு என்று வழங்கப்பட்டது. 

 

ஆனால், குலக்கல்வி என்ற உங்கள் தந்தை செய்த தொழிலை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்ற மாடலை நமக்கெல்லாம் உடைத்துக் காட்டியதே அந்த உயர்சாதியினர்கள் தான். ஏனென்றால், அர்ச்சகர்களாக இருந்தவர்களெல்லாம், முன்சிஃப் வேலையிலும், கலெக்டர் வேலையிலும், வழக்கறிஞர் வேலையிலும் இருக்கிறார்கள். அப்பவே அவர்கள் அந்த தொழிலை விட்டு வேறு வேலைக்கு போய்விட்டார்கள். நீங்கள் பிறந்ததற்கும், நீங்கள் செய்ய வேண்டிய தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நமக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருந்தவர்கள் உயர்சாதியினர்கள் தான். இனிமேல், தந்தை செய்த தொழிலைத் தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னால், நீங்கள் செய்தது மட்டும் நியாமா? என்று நாம் கேள்வி கேட்போம்.

 

சமூகநீதி என்ற முயற்சியை நூறாண்டுக்கு மேல் நீதிக்கட்சி காலத்தில் இருந்து நான்காவது தலைமுறையாக திராவிட இயக்கத்தின் தொண்டனாக பணியாற்றி வருகிறேன். இந்த முக்கிய தருணமான, நாடு எந்த திசையில் போகும் என்று தீர்மானிக்கும் இந்த தேர்தலுக்காக நான் பணி செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வயது 57 ஆகிறது. ஒரு வகையிலோ அல்லது இன்னொரு வகையிலோ எனது குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், நாட்டுடைய எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது. 

 

எனவே, இதை தொலைக்காட்சி மூலமாக பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். ஒரு நாட்டுடைய முன்னேற்றத்திற்கு எந்தளவுக்கு  பொருளாதாரம் முக்கியமோ, அந்தளவுக்கு சமமான வளர்ச்சி வாய்ப்பும் முக்கியம். சாதி, மதம், சமுதாயம் வேறுபாடின்றி அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தான், எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமான தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கும். அதில் குறிப்பாக, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நீங்கள் தான் எதிர்கால வழக்கறிஞர்கள், நீதியரசர்கள், தினமும் வாதாடக் கூடியவர்கள் மற்றும் ஜனநாயக சட்டமைப்பை பாதுகாக்கக் கூடியவர்கள். எனவே, உங்களது பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என்று கூறினார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !