ADVERTISEMENT

அனைத்துத் தகவல்களையும் இணையத்தில் பதிவேற்றுங்கள் - செந்தில் பாலாஜி வேண்டுகோள்!

04:13 PM Dec 02, 2020 | rajavel

ADVERTISEMENT


அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினா் செந்தில் பாலாஜி, கரூரில் செய்தியாளா்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர், இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் முடிந்திருக்கிறது. அதற்கு முன்னதாக 16.11.2020 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டிசம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளர்கள் முகாம் நடைபெற உள்ளது. இதற்கிடையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 1,032 வாக்குச் சாவடிகளிலும், ஆளும் அதிமுகவை சோ்ந்தவா்களும், அவர்களுடைய குடும்ப உறவு முறையைக் கொண்டவர்களும் பல்வேறு பூத்களில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளன.

மாவட்டத் தோ்தல் அதிகாரியிடம் இதுவரை 3 புகார்கள் வழங்கி இருக்கிறோம். நடவடிக்கை எடுக்க வேண்டிய தோ்தல் அதிகாரி, தனக்குக் கீழ் நிலையில் பணியாற்றக் கூடிய அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். அதில், நாங்கள் ஒரு 10 மாதிரிகளை எடுத்து வைத்துள்ளோம்.

கரூர் அ.தி.மு.கவை சேர்ந்தவர்களின் உறவினர்கள் தங்கள் பெயரில், 4 வாக்காளா் அடையாள அட்டையை வைத்துள்ளனர். நாங்கள் எடுத்த 10 மாதிரியில் அனைவருமே அதிமுகவினர். இப்படி 1,032 பூத்துகளில் எத்தனை நபா்கள் இருப்பார்கள் என்று தோ்தல் அதிகாரி சரியான கணக்கீட்டை வழங்க வேண்டும்.


இப்பிரச்சனையை திமுக கழகத் தலைவரிடம் எடுத்துச் சென்றோம். அவரது அறிவுறுத்தலின்படி தி.மு.க அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆஸ்.எஸ்.பாரதி, தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து மனு அளித்துள்ளார். அங்கிருந்து வந்த மனுவிற்கும் இவர்கள் நடவடிக்கை எடுக்காமல் வைத்துள்ளனர்.

தோ்தல் ஆணையத்தின் முக்கியப் பணியே படிவங்கள் வந்தவுடன் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதில் முழு விவரங்களும் இருக்க வேண்டும். நடைபெறும் சிறப்பு முகாம்களில் எந்த பூத்தில் படிவங்கள் வாங்கப்படுகிறதோ, அந்த பூத் எண் போடப்படுவதில்லை, பெயர் உள்ளது, வயது குறித்துப் பதிவிடப்படவில்லை.

கரூரில் சோ்க்கப்பட்ட புதிய வாக்காளா்கள் என்றால் 19 வயதிற்கு மேல் உள்ள தலைமுறையினர்தான். ஆனால், 45 வயது, 50 வயது உள்ளவா்கள் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்படுகிறார்கள். இதுபோன்ற பல தில்லுமுள்ளுகளை செய்து அதிமுக வென்றுவிடாலம் என்று நினைக்கிறது. இதை கரூா் மாவட்ட மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவா்கள் தான் எஜமானர்கள். போலி வாக்காளா்களைச் சோ்க்கும் பணியைச் செய்து தோ்தலில் வென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை கரூா் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இப்பிரச்சனையில் மாவட்டத் தோ்தல் அதிகாரி சரியாக நடந்துகொள்ள வேண்டும். தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் சரியாகப் பணியாற்றவில்லை என்றால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூத் லெவல் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்து தோ்தல் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தொகுதியைத் தாண்டிய பல ஊா்களின் பெயர்களை நீக்கம் செய்துள்ளனா். இடமாற்றம் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குற்றம் சாட்டிய அவா், படிவங்களில் உள்ள எல்லா விவரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு நோ்மையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


மேலும் பேசிய அவர், கரூா் மாவட்ட தி.மு.க சார்பில் முன்வைக்கப்பட்ட இந்த திருத்தங்களையும் தோ்தல் அதிகாரிகள் சரியாகச் செய்யவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். போலி வாக்காளா்கள் 1 பூத்துகளிலேயே 10 பேர் இருக்கிறார்கள். முறையாக அவா்களுடைய பழைய பூத்தில் பெயா் நீக்கம் செய்யப்பட்டு, புதிய பூத்தில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், வாக்காளர் பட்டியலில் அதிகாரிகள் தாங்கள் செய்த தவறை ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள்.

முன்னாள் மாவட்ட ஆட்சியா் செய்த தவறை விட தற்போதைய மாவட்ட ஆட்சியா், தோ்தல் அதிகாரி முன்நின்று செய்து வருகிறார். ஜனவரி 20ஆம் தேதி வந்த பிறகுதான், நமக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா என்று தெரியும். முகாமில் 100 பேர் மனு கொடுத்தார்கள், ஆனால் நேரடியாக அதிகாரிகளைப் பார்த்து 300 பேர் மனு கொடுத்ததாகச் சொல்கிறார்கள். எனவே தோ்தல் அதிகாரிகள், சரியான வாக்காளா்கள் பட்டியலை வெளியிடுங்கள். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடி அதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT