ADVERTISEMENT

“ஆதாரங்களுடன் அறிவித்துள்ளேன்; வேண்டுமானால் அமைச்சர் விவாதத்திற்கு வரட்டும்” - அன்புமணி சவால்

05:16 PM Mar 26, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

“என்.எல்.சி மூலம் வெறும் 800 முதல் 1000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் தவறான தகவல்களை கூறுகிறார்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நில அபகரிப்பை தடுத்தல் மற்றும் நிலக்கரி சுரங்க விரிவாக்கம், புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக கடலூர் மாவட்டத்தை அறிவிக்கச் செய்தல் குறித்து தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், வணிகர் அமைப்புகள், இளையோர் மற்றும் மகளிர் அமைப்புகள் பங்கேற்புடன் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார். பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் என்.எல்.சி நில எடுப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்.எல்.சி நிலம் எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நிலம் எடுப்பதை தடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்பினர் ஆலோசனைகள் வழங்கினர்.

இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “என்.எல்.சி நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என எல்லோரும் வலியுறுத்துகிறார்கள். தமிழக அரசு என்.எல்.சி நிர்வாகத்திற்காக இனி ஒரு சென்ட் இடம் கூட கையகப்படுத்தக் கூடாது. தொடர்ந்து என்.எல்.சி நிர்வாகம் கடலூர் மாவட்டத்திற்கு 66 ஆண்டு காலமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மின் திட்டங்கள் மூலமாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு தமிழ்நாட்டிற்கு 18 ஆயிரத்திலிருந்து இருபதாயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை மட்டுமே உள்ளது. 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மிகையாக உள்ளது. ஆனால் என்.எல்.சி மூலம் வெறும் 800 முதல் 1000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது. ஆனால் என்.எல்.சி மின்சாரம் இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடும் என்பதைப் போல அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் தவறான தகவல்களை கூறுகிறார்.

91 ஆயிரம் நிலம் கையகப்படுத்தப் போவதாக நான் கூறுவதை தவறான தகவல் என தொழில் துறை அமைச்சர் கூறியுள்ளார். நான் இதற்கான அறிக்கையை ஆதாரங்களுடன் அறிவித்துள்ளேன். வேண்டுமானால் அவர் என்னிடம் விவாதத்திற்கு வரட்டும். இந்த 1000 மெகாவாட் மின்சாரத்தை சூரிய மின்சக்தி, காற்றாலை உள்ளிட்ட வேறு மின் திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 2030-க்குள் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நீரேற்று மூலமாகவும், சூரிய ஒளியின் மூலமும் தயாரிப்போம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிறகு நிலத்தை ஏன் எடுக்க வேண்டும்? முப்போகமும் விளையக்கூடிய இந்த நிலங்களை அழித்து, பழுப்பு நிலக்கரியை எடுத்து, சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, தண்ணீரை உறிந்து கடலுக்கு அனுப்பி இப்படி மின்சாரம் தேவையா? அமைச்சர் தங்கம் தென்னரசு விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பு இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவோம் என்கிறார்.

எப்படி பாதிப்பு இல்லாமல் கையகப்படுத்த முடியும்? இது அந்த நிலங்களை கையகப்படுத்தக்கூடிய 20, 25 கிராமங்களுடைய பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த மாவட்ட பிரச்சினை, அது மட்டுமின்றி அருகிலுள்ள அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களை சார்ந்த நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினை. அதுமட்டுமல்லாமல் புதிய வீராணம் நிலக்கரி எடுப்பு திட்டம் கொண்டு வந்தால், சென்னையில் உள்ள மக்களுக்கு வீராணம் குடிநீர் எப்படி கிடைக்கும். இது தலைநகர் வாழ் மக்களின் குடிநீர் பிரச்சனையும் கூட. இது வளர்ச்சிக்கான திட்டம் கிடையாது. தமிழக முதலமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட வேண்டும். நிலம் பறிமுதல் செய்யும் திட்டத்தை கைவிடுங்கள். நாங்கள் இந்த மாவட்டத்தை அழிக்க விடமாட்டோம். அடுத்தடுத்த போராட்டங்களை அறிவிப்போம்” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT