ADVERTISEMENT

“கலைஞர் காலத்தில் நடந்ததற்கு மாறாக நடக்கக்கூடாது” - தனியார் பேருந்து விவகாரம் குறித்து அன்புமணி 

11:09 PM Mar 06, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் மாநகரப் போக்குவரத்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாக உயர்த்தி அனைத்து பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் அடுத்த ஆண்டிற்குள் 1000 தனியார் பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பெயரில் இயக்கும் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அதை திட்டவட்டமாக மறுக்காத போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், மழுப்பலான விளக்கத்தை அளித்திருக்கிறார். தனியார் பேருந்துகளை எந்த வடிவத்திலும் இயக்க முனைவது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்குவதில் தான் முடியும் என்பதால் அது குறித்து தமிழ்நாடு அரசு சிந்திக்கவே கூடாது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 1000 தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியாகிருந்த செய்தி பொதுமக்கள் மத்தியிலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியிலும் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. மாறாக, இப்போதே தனியார் பேருந்துகள் இயக்கப்படாது; அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்காகவே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருக்கிறது; அதன் அறிக்கையை ஆய்வு செய்த பிறகே தனியார் பேருந்துகளை இயக்குவது பற்றி முடிவெடுக்கப்படும் என விளக்கம் அளித்திருக்கிறார்.

அதே நேர்காணலின் பின்பகுதியில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அதனால் இலவச பயணச் சலுகை ரத்து செய்யப்படாது என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதை தம்மையும் அறியாமல் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் எந்த வகையிலும் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். தனியார்மயத்தை பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு செய்து கொண்டுள்ள மொத்த செலவு ஒப்பந்தம் (Gross Cost Contract) தான் அனைத்துக்கும் காரணம். அதன்படி 2022 ஆம் ஆண்டில் 500 பேருந்துகளும் 2024 ஆம் ஆண்டுக்குள் மேலும் 500 பேருந்துகளும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும். ஆனால், இந்த பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்காது; மாறாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் தான் புதிய பேருந்துகளை இயக்கும். புதிய பேருந்துகளை தனியார் நிறுவனத்தின் ஓட்டுநர், நடத்துநர்கள் தான் இயக்குவர். அவற்றுக்கு மாதம் ஒரு தொகையை போக்குவரத்துக் கழகம் வாடகையாக செலுத்தும். இதை தமிழக அரசும் போக்குவரத்துத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் ஒப்புக்கொண்டிருக்கிறது.

முதலில் சென்னையிலும், பின்னர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மொத்த செலவு ஒப்பந்த முறையை நீட்டிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தக்கட்டமாக ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் இதே முறையில் இயக்கப்படும். ஒரு கட்டத்தில் அனைத்து பேருந்துகளும் தனியாரால் இயக்கப்படும். அப்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும். இலவச, மானியக் கட்டண சலுகைகள் தொடரும் என்றாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவையும் திரும்பப் பெறப்படக் கூடும். இத்தகைய ஆபத்து இருப்பதால் தான் இந்தத் திட்டத்தை பா.ம.க. கடுமையாக எதிர்க்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்தை அரசே நடத்த வேண்டும் என்பதற்காகவே தனியார் பேருந்துகள் கலைஞர் காலத்தில் அரசுடைமையாக்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது.

சென்னை போன்ற நகரங்களில் ஊர்திகளின் பெருக்கத்தால் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இரு சக்கர ஊர்திகளும், மகிழுந்துகளும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கான ஒரே தீர்வு பொதுப்போக்குவரத்தை வலுப்படுத்துவது தான். அதற்காக மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை இப்போதுள்ள 3453 லிருந்து படிப்படியாக 7 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அனைத்து பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும். அதன் மூலம், சென்னையில் தனியார் ஊர்திகளின் எண்ணிக்கையை குறைத்து விபத்துகளையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT