ADVERTISEMENT

ஊழல் பணத்தை பிரித்துக் கொள்ளவே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி -அமித்ஷா

06:34 PM Feb 14, 2019 | jeevathangavel

ADVERTISEMENT


ADVERTISEMENT


பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் தனது தேர்தல் சுற்றுப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக ஈரோட்டில் நடந்த நெசவாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் இன்று மதியம் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது...


விரைவில் மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. நரேந்திரமோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நாம் அனைவரும் உறுதி பூண்டு இருக்கிறோம். மக்களின் பங்களிப்போடு ஆட்சி நடக்கவேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாகும். மக்களின் விருப்பம் என்ன, அவர்களின் கஷ்டங்கள் என்ன என்பதைக் கேட்டு அறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதனால் ஒவ்வொரு மாநில மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.


விசைத்தறி, கைத்தறி மற்றும் ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள், தொழிலாளர்களின் கருத்துக்களைக் கேட்க இங்கு வந்துள்ளேன். ஜவுளித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஜவுளித்துறையை முன்னேற்றுவதற்காக, ரூ 1230 கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜவுளித்துறையை மேம்படுத்தி நாடு முழுமைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், 12 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு ரூ 394 கோடியில் மூன்று திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ரூ 121 கோடி மத்திய அரசின் பங்காகும். ஒருங்கிணைந்த ஜவுளித்துறை மேம்பாட்டிற்காக ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 17 ஜவுளி பூங்காங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஆறு ஜவுளிப்பூங்கா பணிகள் முழுமையாக முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த 17 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ரூ 5614 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காங்களால் 1.44 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விசைத்தறியை மேம்படுத்த தமிழகத்திற்கு மட்டும் மத்திய அரசு ரூ 161 கோடி ஒதுக்கியுள்ளது. விசைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில், 65 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை மானியத்தில் எஸ்.டி.எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 45 சதவீதம் வரை, மொத்தம் ரூ 36 ஆயிரம் கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக தமிழகத்திற்கு ரூ 826 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான நிதி ஒதுக்கீட்டில் இது 11 சதவீதமாகும். அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் திருப்பூருக்காக ரூ 487 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் மூலம், எட்டு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக ரூ 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.





இந்த திட்டத்திலே ஏற்றுமதிக்காக ரூ 5728 கோடியும், மொத்த மூலதனம் 25 ஆயிரம் கோடியும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 12 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நெசவு ஏற்றுமதி செய்யக்கூடியவர்களுடைய நலனுக்காக ரூ 3900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நெசவாளர்கள் மற்றும் ஜவுளித்துறையில் இருப்பவர்களுக்கு மத்திய அரசு இன்னும் பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. நெசவாளார்கள், விசைத்தறி உற்பத்தியாளர்கள் என ஜவுளித்துறையைச் சேர்ந்த அனைவரும் உங்கள் கருத்துகளை இங்கே தெரிவித்துள்ளீர்கள். இவை அனைத்துமே பாஜக தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, வரும் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று நான் உறுதிகூறுகிறேன்.


இதற்கிடையே ராகுல்காந்தி தலைமையில் ஒரு பெரிய கூட்டணி அமைப்பதற்கான ஒரு திட்டம் உருவாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்கிறார். ஆனால், அவர்கள் கூட்டணியில் இருப்பவர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர். அதனால், ஸ்டாலினின் விருப்பம் என்னவென்று நமக்கு புரியவில்லை. இன்னொருபுறம், நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மிக வலிமை மிக்க கூட்டணியாக இருந்து கொண்டு இருக்கிறது. ஒருபுறம் தலைமையில்லாத, கொள்கையில்லாத, திட்டமில்லாத, ஊழல் பணத்தைப் பிரித்துக் கொள்வதற்காக ஒரு கூட்டணி ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் நாட்டு மக்களுக்கு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தக் கூடிய, அனைவரோடும் அனைவருக்குமான மேம்பாடு என்ற உறுதியான கொள்கை கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்துள்ளது.


திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தை முன்னேற்றுவதற்காக அமைக்கப்படவில்லை. இது ஊழலுக்கான கூட்டணியாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் வகையில் வலுவான கூட்டணி விரைவில் அமையும். மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். நான் அவருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. பதில் அளிக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால், மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.


மத்தியில் திமுக பங்கேற்று இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசில் ரூ 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. 13வது நிதிக்குழு மூலம் தமிழகத்திற்கு ரூ94 ஆயிரத்து 540 கோடி நிதி அளிக்கப்பட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியில் 14வது நிதிக்குழுவின் மூலமாக முத்ரா கடன் உள்ளிட்ட ஆறு திட்டங்கள் மூலம் ரூ 5 லட்சத்து 42 ஆயிரத்து 65கோடி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒதுக்கிய நிதியை விட 5.2 மடங்கு அதிகமாக பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது. திமுக பங்கேற்ற ஆட்சி மத்தியில் இருந்தபோது, தமிழகத்திற்கு ஏன் அநியாயம் இழைத்தீர்கள் என்பதற்கு ஸ்டாலின் மக்களிடம் பதில் கொடுக்க வேண்டும். அடுத்து வரவிருக்கிற ஐந்து ஆண்டுகளில், மேலும் உயர்ந்த இடத்திற்கு தமிழகத்தை அழைத்துச் செல்வோம் என நான் உறுதி அளிக்கிறேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT