ADVERTISEMENT

அனைத்துக் கட்சி கூட்டம்; அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் பங்கேற்பு

01:01 PM Jul 19, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை நடைபெற உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தின் போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுவின் மக்களவை பிரதிநிதியாகத் தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் கலந்துகொள்ள உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், “‌நாளை (20.07.2023) டெல்லியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மாலை 05:30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்ததின் பேரில்அ.தி.மு.க சார்பில் மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அனுப்பிய அழைப்பிதழையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதே சமயம் அதிமுக சார்பில் மாநிலங்களவை பிரதிநிதியாக தம்பிதுரை கலந்துகொள்ள உள்ளார்.

முன்னதாக அதிமுகவில் இருந்து ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக சார்பில் இருந்து மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பபட்டு இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வழங்கிய தீர்ப்பில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டு இருந்தார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் ஓ.பி.ரவிந்திரநாத் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT