Skip to main content

அண்ணா பல்கலை. வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறையா? - அதிமுக

Published on 28/05/2025 | Edited on 28/05/2025

 

AIADMK questions Kanimozhi about Anna University case

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அதிமுகவும், திமுகவும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறது. தீர்ப்பு குறித்து முதல்வர் வெளியிட்ட ஆதரவு கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பதிலடி கொடுத்திருந்த நிலையில் தற்போது, அதிமுக தரப்பில் இருந்து கனிமொழிக்கு எதிராக அறிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது என்பது திமுக குடும்பத்தின் DNA-வில் கலந்தது. அதற்கு ஸ்டாலினின் தங்கையான கனிமொழி எப்படி விதிவிலக்காவார்? தன் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக இளைஞர்கள் குறித்தோ, திமுக அனுதாபி ஞானசேகரனின் தொடர்புகள் குறித்தோ, சார் குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மிதவாதியாக இருந்த கனிமொழி, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பை, தங்களுக்கு கிடைத்த வெற்றி போல சித்தரித்து அறிக்கை உருட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணைக்கும் உங்கள் அண்ணன் அரசுக்கும் என்ன சம்மந்தம் கனிமொழி? நீங்கள் இந்த வழக்கில் தலையிடவே கூடாது எனத் தானே நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது? அதனை நீங்கள் அமைத்து விசாரித்தது போல் அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன? நீங்கள் தலையிடவே கூடாது என்று அமைக்கப்பட்ட இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் நீங்கள் தலையிட்டு, நீர்த்துப் போகச் செய்து, வழக்கை அவசரப்படுத்தி முடித்துவிட்டு, அந்த ‘சார்’ - ஐ காப்பற்றிவிட்டோம் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வர 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என Timeline போடும் கனிமொழி, அதில் 4 1/2 ஆண்டுகள் அவர் அண்ணன் ஆட்சி என்று மறந்துவிட்டாரா? அல்லது, தெரிந்தே, உட்கட்சி பூசலில் Same Side Goal அடித்துவிட்டாரா? பொள்ளாச்சி வழக்கை முறையாக சிபிஐ விசாரித்து, சரியான தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. அதிலும் சம்மந்தம் இல்லாத நீங்கள் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றதால் தான், இந்த கேள்வியைக் கேட்கிறோம்.

‘அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை’ - அப்படியா? நாங்கள் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு என்று தானே நினைத்தோம்? அப்படியென்றால், நீதிமன்ற உத்தரவை மீறி நீங்கள் விசாரித்தீர்களா? நீதிமன்ற தீர்ப்பை மீறி விசாரித்து, யாரைக் காப்பாற்றினீர்கள்?

அண்ணா பல்கலை வழக்கு மட்டுமல்ல- ஒவ்வொரு வழக்கிலும் உங்கள் அண்ணன் அரசு எந்த லட்சணத்தில் விசாரிக்கிறது என்பதற்கு நீதிமன்றங்கள் கொடுக்கும் தொடர் சம்மட்டி அடிகளே சாட்சி. இதற்கெல்லாம் முத்தாய்ப்பான பேரிடியாக தங்கள் பாதுகாப்பை இழந்து நிற்கும் தமிழக மக்கள், ஜனநாயகப் பூர்வமாக 2026-ல் கொடுக்கப் போகும் தர்ம அடி காத்திருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்