ADVERTISEMENT

“அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி” - எடப்பாடி பழனிசாமி!

10:26 PM Mar 24, 2024 | prabukumar@nak…

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார். அப்போது அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கலந்துகொள்ளவில்லை.

இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “இந்த மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மூன்று கூட்டணிகள் உள்ளன. ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால் அதிமுக மற்றும் திமுக இடையேதான் போட்டி. இதனை நாடு அறியும். தமிழக மக்கள் அறிவார்கள். தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை. மதுரை எய்ம்ஸ் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டியதுதானே. 38 எம்.பி,க்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளாக செங்கலை ரோட்டில் காட்டிக் கொண்டு இருக்கிறார். அதை நாடாளுமன்றத்தின் உள்ளே காட்டுங்கள். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை பெற, நிதியை பெற நாங்கள் பாடுபடுவோம்.

நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க. - காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என்று கூறினால் மட்டும் போதாது. அதனை செய்து காட்ட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. அ.தி.மு.க. சிறுபான்மையின மக்களுக்கு துணை நிற்கும். இதை நான் ஓட்டுக்காக சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT