ADVERTISEMENT

அந்த ரவிச்சந்திரன் இல்லை; இந்த ரவிச்சந்திரன்! - மா.செ. நியமனத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்த மாயம்!

10:57 AM Nov 13, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


‘நான் மாவட்ட செயலாளர் ஆயிட்டேன்..’ என்று (விருதுநகர் மாவட்டம் – நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்) E.ரவிச்சந்திரனும் அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய சிறிது நேரத்திலேயே, ‘தப்பு பண்ணிட்டோம்.. தப்பு பண்ணிட்டோம். விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரா கட்சித் தலைமை அறிவித்திருப்பது K.ரவிச்சந்திரன் (வெம்பக்கோட்டை ஒன்றிய கழக முன்னாள் செயலாளர்)’ எனத் திருத்தப்பட்ட அறிக்கை வெளிவர, குதூகலத்தில் இருந்தவர்கள் நொந்து ‘நூடுல்ஸ்’ ஆனார்கள்.

ADVERTISEMENT

‘மாவட்டங்களைப் பிரித்து, அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்களின் நியமன அறிவிப்பை வெளியிடுவதில் இத்தனை குளறுபடிகள் ஏன்?’ என்ற கேள்விக்கு, “கட்சித் தலைமை எடுக்கின்ற திடீர் முடிவுகளால், ஆரம்பத்திலிருந்தே விருதுநகர் மாவட்ட தொண்டர்கள், தொடர்ந்து குழப்பத்திலேயே உள்ளனர்.’ என்கிறார்கள் அக்கட்சியினர்.


விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, 2011-ல் மாவட்ட கழகச் செயலாளர் ஆனார். தொடர்ந்து அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்து வருகிறார். ஆனாலும், கடந்த மார்ச் 22-ஆம் தேதி, மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். நான்கே மாதங்களில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி, அவரையே விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமித்தது கட்சித் தலைமை. ‘திண்ணை எப்போது காலியாகும்’ என்று காத்திருந்ததுபோல், அந்த நான்கு மாதங்களில், ‘அடுத்த மாவட்ட செயலாளர் நானே!’ என்று, கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஆளாளுக்கு மார் தட்டினார்கள். ‘கொலை மிரட்டல் விடுத்தார்’ என சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், பகிரங்கமாகவே ராஜேந்திரபாலாஜி மீது குற்றம் சுமத்தினார்.


இந்த நிலையில், 12-ஆம் தேதி இரவு, மாவட்டங்களைப் பிரித்து மாவட்ட கழகச் செயலாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது கட்சித் தலைமை. அதில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு, மீண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியையும், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் கிழக்கு மாவட்டத்துக்கு, நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் E.ரவிச்சந்திரனையும், மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்து அறிவித்தது.


நரிக்குடி ஒ.செ. (அம்மன்பட்டி) E.ரவிச்சந்திரன், ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் ஆவார். வெளிப்படையாக அமைச்சரோடு மோதியபடியே இருந்த ராஜவர்மனுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், E.ரவிச்சந்திரனையும் ஒரு பகுதியின் மாவட்ட செயலாளர் ஆக்கியிருக்கிறது தலைமை என்று அந்தத் தரப்பு மகிழ்ச்சியில் திளைத்த வேளையில்தான், ‘அது வேறு ரவிச்சந்திரன்’ என்று திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகி, அவர்களை நிலைகுலைய வைத்தது. காரணம் – முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியான K.ரவிச்சந்திரன், ராஜேந்திரபாலாஜியின் தீவிர விசுவாசியாக இருப்பதுதான். இதன்மூலம், ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டமும், மீண்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வசமாகிவிட்டது.


‘2011-ல் சட்டமன்ற வேட்பாளர்கள் பட்டியலே, அன்றைய தலைமை ஜெயலலிதாவின் அனுமதியின்றி வெளியிடப்பட்டு, பிறகு முற்றிலுமாக மாற்றப்பட்ட வரலாறெல்லாம் அதிமுகவுக்கு உண்டு. தற்போது மா.செ. நியமனத்தில் குளறுபடி என்பதெல்லாம் ஜுஜுபி.’ என, அக்கட்சியின் தொண்டர்களே ‘கமெண்ட்’ அடிக்க, ‘12-ஆம் தேதி இரவு என்ன நடந்தது?’ என, அதிமுக தலைமைக் கழக வட்டாரத்தில் விசாரித்தோம்.


“எந்தத் தப்பும் நடந்துவிடவில்லை. ராஜவர்மன் ஆதரவாளர் E.ரவிச்சந்திரனைத்தான் முதலில் தலைமை அறிவித்தது. ராஜேந்திரபாலாஜியோடு பிரச்சனை எதுவும் பண்ணக்கூடாது என்று E.ரவிச்சந்திரனுக்கு அறிவுரை வேறு வழங்கியது. அவரும், பகையை மறந்து, ராஜேந்திரபாலாஜியிடம் ஆசி பெறுவதற்காக அமைச்சரின் லைனில் வந்தார். அப்போது, முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டார். சுதாரித்த அமைச்சர் அந்த இரவு வேளையிலேயே தலைமையைத் தொடர்புகொண்டு ‘மாவட்டத்தில் ஒரு பகுதியின் மாவட்ட செயலாளராக ராஜவர்மன் தரப்பில் ஒருவரை நியமித்தால், இன்னொரு பகுதியின் மாவட்ட செயலாளாராக ஒருக்காலும் நான் இருக்க மாட்டேன்.’ என்று கறார் முகம் காட்டி, தனது எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்தார். ‘அமைச்சருக்கு அறவே ஒத்துவராத, எதிர்த்தரப்பினைச் சேர்ந்த ஒருவருக்கு மா.செ. பொறுப்பு வழங்கி, தொடர்ந்து உட்கட்சி பூசலை நாமே வளர்த்துவிடுவது சரியாக இருக்காது.’ என்பதை தலைமையும் உணர்ந்தது. ராஜேந்திரபாலாஜி செய்த இந்த மாயத்தால், அவரது விருப்பப்படியே K.ரவிச்சந்திரனை, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எனத் திருத்தி, சிறிது நேரத்திலேயே அறிவிப்பினை மாற்றி வெளியிட்டது.” என்றனர்.


பேட்டியிலோ, ட்வீட்டிலோ, ஏதாவது ‘அதிரடி’ செய்து, தலைமையிடமும் உரசிக்கொண்டு, நடவடிக்கைக்கு ஆளாகி அவ்வப்போது சறுக்கினாலும், சிலிர்த்தெழுந்துவிடுகிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT