ADVERTISEMENT

அமித்ஷா நெருக்கடி எதிரொலி! - முதல் பட்டியலில் நிலக்கோட்டையைத் தக்கவைத்த எடப்பாடி!

06:19 PM Mar 05, 2021 | tarivazhagan

ADVERTISEMENT



தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதேவேளையில் இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் இருக்கிறார்கள். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை, அதிமுக வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். போடியிலும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், இவர்களுடன் 6 பேரை அறிவித்துள்ளது. அதில், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழி பெயரும் இடம்பெற்று இருப்பதைக் கண்டு அதிமுகவினர் உள்பட கூட்டணிக் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

ADVERTISEMENT

இது சம்பந்தமாக அதிமுக கூட்டணிக் கட்சியினர் சிலரிடம் கேட்டபோது, "இந்த நிலக் கோட்டை தொகுதி அதிமுகவுக்குச் சாதகமான தொகுதிதான். இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெ' இருந்தபோது கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியதில்தான் ‘டி.வி’ சின்னத்தில் போட்டியிட்ட ராமசாமி 2011ல் வெற்றிபெற்றார்.

அப்பொழுது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் தனித்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அதன் பிறகுதான் ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானார். அதைத் தொடர்ந்துதான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஜான்பாண்டியன் போட்டியிட விரும்பியிருக்கிறார். அதுபோல் இத்தொகுதியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில்தான் கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வந்தபோது ஜான்பாண்டியன் தனிப்பட்ட முறையில் கட்சிப் பொறுப்பாளர்களுடன் வரவேற்பு கொடுத்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, நிலக்கோட்டை தொகுதியை, தனக்கு ஒதுக்கிக் கொடுக்க தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டுமென்று கூறியிருக்கிறார். அதைப் பொறுமையாகக் கேட்ட அமித்ஷாவும் அவசியம் முதல்வரிடம் பேசி நிலக்கோட்டை தொகுதியை வாங்கிக் கொடுக்கிறேன் என்று உறுதி கொடுத்துவிட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து, சென்னை சென்ற அமித்ஷா, முதல்வர் எடப்பாடியிடமும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிடமும் நிலக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியனுக்கு அவசியம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

ஆனால், இத்தொகுதியின் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனோ இத்தொகுதி அதிமுக கோட்டை. அதைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது, சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழிக்குதான் சீட் கொடுக்க வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்துகிறார். அதுபோல் அதிமுக கோட்டையாக இருக்கக்கூடிய இத்தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற மனநிலையில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருந்துவந்தனர். இருந்தாலும், அமித்ஷா தொடர்ந்து அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவந்ததார். ஆனால், நிலக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லாத எடப்பாடி, அமித்ஷா உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுச் செயல்பட ஆரம்பித்தார்.

அதன் அடிப்படையில்தான், அதிமுகவில் ஜெ' இருந்தபோதே வேட்பாளர்கள் பட்டியலை ஒட்டுமொத்தமாக அறிவிப்பார். ஆனால், எடப்பாடியோ அமித்ஷாவுக்குப் பயந்து முதல் கட்ட வேட்பாளர் என்ற புது நடைமுறையைக் கொண்டுவந்து அதில் ஆறு வேட்பாளர் பட்டியலில் நிலக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக தேன்மொழியை அறிவித்து இருக்கிறார். அதைக் கண்டு, ஜான்பாண்டியன் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அது போல அதிமுகவினரும் தேன்மொழிக்கு மீண்டும் சீட் கொடுத்ததைக் கண்டு ஒருபுறம் அதிருப்தியிலும் மற்றொருபுறம் சந்தோஷத்திலும் இருந்து வருகிறார்கள்" என்றனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள பிஜேபியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா உத்தரவை மதிக்காமல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனியாகச் செயல்பட்டது அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT