ADVERTISEMENT

'அவரது சிந்தனைகளை உங்களால் கைது செய்ய முடியாது’ - சீறும் ஆம் ஆத்மி 

10:09 AM Mar 22, 2024 | kalaimohan

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சோதனை நடத்தி வந்தனர். டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்.பி., தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர்.

ADVERTISEMENT

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அமலாக்கத்துறை இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியது. அவை அனைத்தையும் அவர் நிராகரித்தார். ஆனால், விசாரணைக்கு ஆஜரானால் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தினாலேயே அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

ADVERTISEMENT

நேற்று இரவு 8 மணியளவில் புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் நேரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெஜ்ரிவாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சி எடுப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரியங்கா காந்தி எனப் பல்வேறு தரப்பினரும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கலாம் ஆனால் அவரது சிந்தனைகளை உங்களால் கைது செய்ய முடியாது. அவர் சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு சித்தாந்தவாதி' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் டெல்லி அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்தியாவிலேயே ஒன்றிய அரசால் முதலமைச்சர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின் ஒரு முதலமைச்சர் கைது செய்யப்படுவதும் இதுவே முதல் முறை. உச்சநீதிமன்றம் இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் கெஜ்ரிவாலின் பிரச்சாரத்தை முடக்கவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பிரதமர் நரேந்திர மோடி அச்சப்படும் ஒரே தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜனநாயக முறையில் பாஜகவில் வெற்றி கொள்ள முடியவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டாலும் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவாலே தொடர்வார் என அம்மாநில சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT