Arvind Kejriwal extended court custody

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார்.

Advertisment

இதனையடுத்து அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு இன்று (07.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைத் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், “கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்க 3 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டால், அமலாக்கத்துறையும் தனது தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதி தர வேண்டும். எனவே இன்றையே தினமே அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை முடித்துவிடுவோம் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. அனைத்து தரப்பினரும் சமம். கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவரை கைது செய்திருக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

Advertisment

Arvind Kejriwal extended court custody

மேலும் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “நிபந்தனைகளின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவது வழக்கம் தான். கெஜ்ரிவால் தரப்பில் இரண்டு நாட்கள் மட்டுமே வாதிடப்பட்டது. ஆனால் துஷார் மேத்தா, கெஜ்ரிவால் தரப்பில் மூன்று நாட்கள் வாதிட்டதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் தவறான கருத்தை உருவாக்க துஷார் மேத்தா முயற்சி செய்கிறார். மேலும் முதல்வரின் கையெழுத்து இல்லை எனக் கூறி டெல்லி துணை நிலை ஆளுநர், அரசின் கோப்புகளை திருப்பி அனுப்பி விட்டார்” எனவும்வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிடுவதற்கு கெஜ்ரிவால் தரப்புக்கு உரிமை உள்ளது. அதே சமயம் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவாலை விடுவித்தால் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளக் கூடாது. பதவியிலிருக்கும் முதலமைச்சர் என்பதால் அவருக்கு எந்தத்தடையும் விதிக்க முடியாது” எனத் தெரிவித்தார். மற்றொரு நீதிபதி தத்தா, “தேர்தல் நடக்காமல் இருந்திருந்தால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் என்ற கேள்வியே எழுந்திருக்காது” எனத் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணையை மே 9 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதே சமயம் டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20 வரை நீட்டித்து டெல்லி ரேஸ் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment