ADVERTISEMENT

1947-ல் எந்த போர் நடந்தது? கவனத்திற்கு வந்தால் மன்னிப்பு கேட்கிறேன் - கங்கனா ரணாவத்!

05:31 PM Nov 13, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வரும் இவர், சில நாட்களுக்கு முன் ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 1947-ல் பெற்றது பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ஆம் ஆண்டு கிடைத்தது" எனத் தெரிவித்தார்.

இதற்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. கங்கனா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும், தேசிய விருதுகளையும் திரும்பப் பெறவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் கங்கனா ரணாவத் ஒரு புத்தகத்தின் பகுதியைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 1947-ல் என்ன போர் நடந்தது எனக் கேள்வியெழுப்பியுள்ளதோடு, இதற்கு பதிலளித்தால் பத்மஸ்ரீ விருதைத் திரும்ப அளித்துவிட்டு, மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கங்கனா பதிவிட்டுள்ளதாவது; எல்லா விஷயங்களும் அந்த நேர்காணலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. 1857-ல் சுதந்திரத்திற்கான முதல் கூட்டு போராட்டம் நடைபெற்றது. அதோடு சுபாஷ் சந்திரபோஸ், ராணி லக்ஷ்மிபாய் மற்றும் வீர சாவர்க்கர் போன்ற உயர்ந்தவர்கள் தியாகம் செய்தனர். 1857-ல் போர் நடந்தது எனக்கு தெரியும். ஆனால் 1947-ல் எந்த போர் நடைபெற்றது என்பது எனக்கு தெரியவில்லை. யாராவது அதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தால் நான் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பித் தருகிறேன், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இதில் எனக்கு உதவுங்கள்.

நான் தியாகி ராணி லக்ஷ்மி பாயின் திரைப்படத்தில் பணிபுரிந்தேன். அதற்காக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்தேன். தேசியவாதம் வளர்ந்தது அதோடு வலதுசாரியமும் வளர்ந்தது. ... ஆனால் அது ஏன் திடீரென இறந்தது?. ஏன் காந்தி பகத்சிங்கை இறக்கவிட்டார். ஏன் நேதாஜி சுபாசந்திரபோஸ் கொல்லப்பட்டார். அவருக்கு ஏன் காந்திஜியின் ஆதரவு கிடைக்கவில்லை? பிரிவினைக்கோடு ஒரு வெள்ளைக்காரனால் ஏன் வரையப்பட்டது. இந்தியர்கள் ஏன் சுதந்திரத்தைக் கொண்டாடாமல், ஏன் ஒருவரை ஒருவர் கொன்றனர்?. சில விடைகளைப் பெற விரும்புகிறேன். விடைகளைப் பெற தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

2014 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பொறுத்தவரையில், இந்தியாவின் உணர்வும் மனசாட்சியும் விடுவிக்கப்பட்டது. இறந்த நாகரீகம் உயிரோடு சிறகடித்து வந்து, இப்போது கர்ஜனை செய்து உயர்ந்து நிற்கிறது. முதல் முறையாக ஆங்கிலம் பேசாததற்காகவோ அல்லது சிறிய நகரங்களில் இருந்து வருவதற்காகவோ அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்காகவோ நம்மை அவமானப்படுத்த முடியாது. எல்லாமே ஒரே நேர்காணலில் கூறப்பட்டுள்ளன. குற்ற உணர்ச்சி உள்ளவர்கள் எரிச்சலை உணர்வார்கள், அதற்கு எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு கங்கனா பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்தும் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT