ADVERTISEMENT

இஸ்ரேல் மற்றும் ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

10:40 AM Apr 13, 2024 | mathi23

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

ADVERTISEMENT

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ‘இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நிலவும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை, அனைத்து இந்தியர்களும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அந்த நாடுகளில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரங்களை தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும், முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT