Iran's Top Nuke Scientist passed away

Advertisment

ஈரான் நாட்டின் மூத்த அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அரசியலில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இயற்பியல் பேராசிரியரான மொஹ்சென் ஃபக்ரிஸாதே இரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையில் அதிகாரியாக இருந்தவர். பின்னர் 1989 ஆம் ஆண்டு ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தின் முன்னோடியான 'அமத்' என்ற ரகசியத் திட்டத்தை முன்னெடுத்தவரான இவர், ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். நேற்று தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அப்சார்ட் நகரின் அருகே தனது காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவரது காரை குறிவைத்துத் தாக்கியுள்ளது.

அப்போது அந்தக்குழுவுக்கும் மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் காவலர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மொஹ்சென் ஃபக்ரிஸாதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த படுகொலைக்குப் பின்புலமாக இஸ்ரேல் இருந்துள்ளதென ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் அணுஆயுதங்களின் தந்தை என மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை இஸ்ரேல் பிரதமர் ஒரு முறை நேரடியாகவே விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் ஈரான், இஸ்ரேலின் உறவு இந்த விவகாரத்தால் மேலும் சிக்கலடையும் எனச் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.