ADVERTISEMENT

மிஷன் 2024: காங். உடனான கூட்டணயில் சலசலப்பை ஏற்படுத்திய திரிணாமூல் காங். நாளேடு!

05:41 PM Sep 18, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் திரிணாமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஜாகோ பங்களா கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு பிரதமர் பதவி மீது கண் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என கருதப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் ஜாகோ பங்களாவில் 'ராகுல் காந்தி தோற்றுவிட்டார், மம்தாவே மாற்று' என வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், "காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணி பற்றி நாங்கள் ஒருபோதும் விவாதிக்கவில்லை. ஆனால் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி இன்னும் உருவாகவில்லை. மம்தா பானர்ஜி நாட்டிற்கான மாற்று முகம். அந்த மாஸ் லீடரை (மம்தாவை) மாற்றாக முன்வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யத் தொடங்குவோம்" என கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கட்டுரையில், "ராகுல் காந்திக்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் தோல்வியடைந்துவிட்டார். மாற்று கூட்டணி காங்கிரசுடன் ஏற்படுத்தப்படும். ஆனால் பிரச்சாரத்திற்கு வலுவான ஒரு முகம் இருக்க வேண்டும். அந்த முகம் மம்தா பானர்ஜி" என கூறப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, "நாடு மாற்று ஒன்றைத் தேடிவருகிறது. எனக்கு ராகுல் காந்தியை நீண்டகாலமாக தெரியும். ஆனால் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று முகமாக உருவாக தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மோடிக்கு மாற்று முகமாக மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்" என திரிணாமூல் காங்கிரஸின் மக்களவை தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுரையினால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே இந்தக் கட்டுரை குறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, "மாற்று முகமாக யார் வெற்றிபெற்றுள்ளார், யார் வெற்றிபெறவில்லை என்ற விவாதத்தில் ஈடுபடமாட்டோம். இது 2021தான். மக்களவைத் தேர்தல் 2024இல்தான் நடைபெற உள்ளது. 2014 முதல் மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி நிலையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவருகிறார்" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "ஒரு கூட்டணி உருவாகும்போது, கூட்டணியை யார் வழிநடத்துவது என்பது குறித்து அனைவரும் ஒருமனதாக முடிவெடுப்பார்கள் என்றே இந்திய அரசியல் வரலாறு தெரிவிக்கிறது. எனவே அதுவரை நிறைய கருத்துகள் வரும். ஆனால் அவையெல்லாம் இறுதி முடிவல்ல" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT