ADVERTISEMENT

தக்காளி காய்ச்சல்; கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பு!

02:58 PM May 25, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா உட்பட உலகம் முழுக்க கரோனாவின் தாக்கம் மக்கள் வாழ்வையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இந்தியாவில், இதர மாநிலங்களை விட கேரளாவின் பாதிப்பு சற்று உச்சம் தான். கரோனாவின் மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது கேரளாவில் தக்காளி காய்ச்சல் ஆரம்பமாகியுள்ளது.


கடந்த சில நாட்களாக கேரளாவின், கொல்லம் மற்றும் அதன் மாவட்டத்திற்குட்பட்ட அஞ்சல், ஆரியங்காவு, கழுதுருட்டி, உள்ளிட்ட ஏரியாவின் குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தொண்டைப் புண் எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டதுடன் தலைவலி, கை கால்கள் மற்றும் முதுகு போன்ற பாகங்களின் தோல்களில் அரிப்பு ஏற்பட்டு பாதங்களில் கொப்புளமாகவும் மாறியதுடன் உடலில் சிகப்பு நிறம் கூடிய தடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் கண்ட குழந்தைகள் பசியின்மை காரணமாக சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டுள்ளனர். கோடையின் போது காணப்படும் சிக்கன் பாக்ஸ் போன்ற தாக்குதலைப் போன்றிருந்தாலும், உடலில் சிகப்பு நிறம் போன்ற தடிப்புகள் காணப்பட்டதால் தக்காளிக் காய்ச்சல் என்றும் மருத்துவ வட்டாரங்கள் வெளிப்படுத்துகின்றன.


குழந்தைகளுக்கு இந்த நோய் கண்ட 5 தினங்கள் காய்ச்சலாலும், தொண்டைப் புண் போன்றவைகளோடு பசியின்மையாலும் அவதிப்பட்டுத் துவண்டு போயிருக்கின்றனர். அதன் பின்னர் தரப்படும் மருத்துவ சிகிச்சையையடுத்து, தாக்குதலின் வீரியம் குறைந்து குணமாகிவிடுகிறார்கள். ஆனாலும் இதன் தாக்கம் மிதமான பாதிப்பையே ஏற்படுத்துமாம்.


கொல்லம் மாவட்டம் முழுமையிலும் சுமார் 85க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை மட்டுமே குறிவைத்து தாக்கப்படுகிற தக்காளி காய்ச்சல் காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ.16. எனப்படுகிற வைரசால் ஏற்படுகின்றன. இருப்பினும். அத்தனை பெரிய, பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்கிறார்கள் கேரள சுகாதாரத்துறையினர்.


5 வயது முதல் 10 வயது வரையிலான தக்காளி காய்ச்சலால் தாக்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் அங்கன் வாடிகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் அரசின் அங்கன்வாடிகளிலேயே வைத்து உணவு, உடை உறைவிடம் என்று பராமரிக்கப்படுகிறார்கள்.


கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவு ஊராட்சிக்குட்பட்ட கழுதுருட்டி பகுதியின் அங்கன் வாடியில் சுமார் 6 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்திருக்கிறார்கள். அங்கு ஆய்வு செய்த ஆரியங்காவு ஊராட்சியின் சுகாதார ஆய்வாளரும் ஹெல்த் இஸ்பெக்டருமான அருண்குமார், அங்கன் வாடியைச் சோதனை செய்து விட்டு இங்கு 6 குழந்தைகளுக்குப் பரவல் கண்டுள்ளதால் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் தொண்டையில் ஏற்படும் சளி கட்டியாகி அது தடிப்பாக வாயில் புண் ஏற்பட்டு உடலில் சிகப்பான தடிப்பும் காணப்படும். இதனால் குழந்தைகளால் உணவு உண்ண முடியாது. சிரமப்படுவார்கள். இந்தக் குழந்தைகள் விளையாடுகிற விளையாட்டுப் பொருட்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும் போதும், உண்ணும் பாத்திரங்கள், உடுத்துகிற ஆடைகள் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் பரவுவதால் தக்காளி காய்ச்சல் ஏற்படுகிறது.


இது போன்ற அறிகுறிகள். தென்பட்டால் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இம்யூனிட்டி பவர் என்கிற உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடுகளிருக்கும் குழந்தைகளையே இந்நோய் தாக்குகிறது என்றார்.


இது குறித்து மேலும் அறியும் பொருட்டு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஸ்லினிடம் பேசியம் போது, “கடுமையான வெயில், வெப்பமடித்த பின்பு உண்டாகும் மழை மறுபடியும் வெயிலின் தகிப்பு காரணமாக ஏற்படும் அப்நார்மல் எனப்படும் அன்யூஸ்வல் க்ளைமேட் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இதுவும் ஒரு வகையான ப்ளூ வைரஸ் வகையைச் சேர்ந்தது தான்” என்கிறார்.


கேரளாவில் கண்டறியப்பட்ட தக்காளி காய்ச்சலின் தாக்கம் தமிழகத்திற்குள்ளும் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வகையில் தென்காசி மாவட்டத்தின் எல்லையை ஒட்டி கேரளாவின் கொல்லம் மாவட்டம் அமைந்திருப்பதால், தென்காசி சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் அனிதா தலைமையிலான சுகாதார உயரதிகாரிகள் எல்லைப் பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT