ADVERTISEMENT

“அவரையெல்லாம் பிடிக்க முடியாது சார்” - போலீசுக்கு தண்ணி காட்டிய சாகச திருடன்

11:12 AM Nov 01, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மின் பணி, ஹோட்டல் மற்றும் கட்டுமானப் பணி உள்ளிட்ட வேலைகளுக்காக மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவின் காசர்கோடு, கொச்சி, எர்ணாகுளம் மற்றும் கர்நாடகா மாநில எல்லையோர மாவட்டங்களின் நகரங்களில் உள்ளனர்.

காசர்கோடு மாவட்டத்தின் காஞ்சங்காடு நகரிலும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூலி வேலைகளில் இருக்கின்றனர். 30ம் தேதி மாலை காஞ்சங்காடு நகரின் கடைவீதியில் வீட்டு உபயோகத்திற்கானப் பொருட்களை வாங்கச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று, அந்தப் பெண் அணிந்திருந்த செயினைப் பறித்துக் கொண்டு ஓடியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்தப் பெண் அலறியுள்ளார். இந்தச் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அவரைத் துரத்தியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்தத் திருடன் திடீரென்று சாலையிலுள்ள மின் கம்பத்தில் சரசரவென ஏறியிருக்கிறார். தகவலறிந்த மின் பணியாளர்கள் அந்த டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பைத் துண்டித்தனர்.

தகவலின் பேரில் காஞ்சங்காடு காவல்நிலையப் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அவரைப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்கும் தண்ணி காட்டிய திருடன் தனது சட்டையைக் கழட்டி மின்கம்பி உராய்விற்கு பாதுகாப்பாக கைகளில் சுற்றிக் கொண்டு உயர் மின் அழுத்த கம்பியில் அசால்ட்டாக அந்தரத்தில் நடந்திருக்கிறார். ஒரு பக்கம் மின் கம்பம் வழியாக ஏறிய தீயணைப்புப் படையினர் அவரைப் பிடிக்க முயல அவரோ சரசரவென மறுமுனைக்கு ஓட மறுமுனையிலும் போலீசும், பொதுமக்களும் லைனில் ஏறி கம்பு மற்றும் கற்கள் கொண்டு தாக்க முயற்சித்தும் முடியவில்லை.

இறுதியாக டிரான்ஸ்பார்மர் வழியாக ஏறிய மூன்று போலீசார், லைனைப் பிடித்து கடுமையாக அசைக்க, பிடிமானம் இல்லாமல் திருடன் கீழே விழப் போக காலைக் கட்டி மேற்கொண்டு நகர விடாமல் மடக்கிப் பிடித்தனர். மின் கம்பி வழியே தப்பிக்க முயன்ற சாகச சர்க்கஸ் திருடனின் இந்தக் கிளித்தட்டு ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதுமட்டுமல்லாமல் திருடனின் இந்தத் தப்பிப்பு சர்க்கஸ் சம்பவத்தைக் காணத் திரண்ட மக்கள் கூட்டத்தின் புருவங்களை உயர வைத்தது. ஆளைத் தூக்கி வீசுகின்ற டிரான்ஸ்பார்மரிலிருந்து அவரைப் போலீஸ் உயிருடன் மீட்டது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.

“பிடிபட்ட திருடன் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கூலி வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் மின்சாரத் துறையில் கூலி வேலையிலும் ஈடுபட்டிருக்கலாம் என்றும், வேறு திருட்டுச் சம்பவத்தில் தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது” என்கின்றனர் காஞ்சங்காடு போலீசார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT