ADVERTISEMENT

“நிதிஷ்குமார் வேறு அணிக்கு மாறமாட்டார் என்று மோடியால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?” - தேஜஸ்வி யாதவ்

06:44 PM Feb 12, 2024 | mathi23

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

இதனையடுத்து, பீகார் மாநில சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பு இன்று (12-02-24) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, பா.ஜ.க. 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 4, ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என பாஜக கூட்டணி அரசுக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று (12.02.2024) நடைபெற்றது. அதில், பா.ஜ.க - 78, நிதிஷ்குமாரின் ஜே.டி.யூ - 45, ஹெச்.ஏ.எம்.எஸ் - 4 என நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 127 வாக்குகள் பெறப்பட்டன. மேலும், ஆர்.ஜே.டி -79, காங்கிரஸ் -19, இடதுசாரி - 16 என எதிர்க்கட்சிகளுக்கு 112 வாக்குகள் பெறப்பட்டன. இதன் மூலம், நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கெடுப்பின் வெற்றிக்கு முன்னதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சட்டசபையில் பேசினார். அப்போது அவர், “ஒன்பது முறை முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் நிதிஷ்குமாரை ஒரு குடும்ப உறுப்பினராக நினைத்தோம். நிதிஷ்குமார் முன்பு பா.ஜ.கவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். இப்போது அவர்களை புகழ்ந்து கொண்டிருக்கிறார்.

மீண்டும் நிதிஷ்குமார் வேறு அணிக்கு மாறமாட்டார் என்பதை பிரதமர் மோடியால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? நிதிஷ்குமார் மோடிக்கு எதிராக உயர்த்திய போர்க்கொடியை இனி நான் ஏந்துவேன். எதுவாக இருப்பினும் நாங்கள் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உரிய மரியாதையை செலுத்துவோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT