ADVERTISEMENT

"தமிழில் வாதாடுவது சிறப்பாக இருக்கும்" - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

10:50 AM Jan 21, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக அறைகளுக்கான கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு கட்டிடம் கட்டும் பணிகளை, பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசும்போது, " நீதிமன்றத்தில் அதிக நேரம் மக்கள் செலவிடக்கூடாது. நீதி விரைந்து தரப்படுதல் அவசியம். நீதிமன்றம் நவீனப்படுத்தப்பட வேண்டும். அதற்கு நீதிமன்றங்களில் தரமான 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும். கடந்த 2014ல் சான்றிதழ்களில் உயர் அதிகாரிகள் கையெழுத்து தேவையில்லை என்ற முறையைப் பிரதமர் நடைமுறைப்படுத்தினார். இது ஜனநாயகம். நீதித்துறை மக்களுக்கானது. நீதித்துறைக்கு அனைத்து வித ஒத்துழைப்பையும் அரசு தரும். உச்சநீதிமன்ற நீதிபதி தொடங்கி அனைத்து நீதிபதிகளுக்கும் தெரிவிப்பது தன்னிச்சையாக நீதித்துறை செயல்படும் என்ற உறுதியைத்தான்.

நீதிபதிகள் நியமனம் பற்றிய கொலிஜியம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். அதுதொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையே தொடரும். நீதிபதிகள் நியமனத்தில் சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம். பலரும் தேவையில்லாமல் எல்லா விஷயங்களையும் பிரச்சினை ஆக்குகின்றனர். நீதித்துறைக்கும், அரசுக்கும் பிரச்சனை என்று கூறுவது தவறானது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சுமுக உறவே உள்ளது. புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அல்லது நீதிபதிகள் அடங்கிய அமர்வுகள் நிச்சயம் அமைத்துத் தரப்படும்" என்று உறுதியளித்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசும்போது, " உள்ளூர் மொழியில் நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். தமிழில் வாதாடுவது சிறப்பாக இருக்கும். பல சிக்கல்கள் இதில் இருந்தாலும் மக்களுக்கு இது மிக உதவியாக இருக்கும். நீதித் துறையில் பணியாற்ற அதிக அளவில் பெண்கள் வரவேண்டும்" என்றார். முன்னதாக பேசிய முதல்வர் ரங்கசாமி, " புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றோம் அதற்கான ஆலோசனைகளை நீதித்துறையினர் அரசுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியில் ரூ.13 கோடி செலவில் வழக்கறிஞர்கள் கட்டிடம் கட்டப்படவுள்ளது. புதுச்சேரியில் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளம் வழக்கறிஞர்களுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT