puducherry chief minister waiting for governor tamilisai soundararajan

Advertisment

நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர்திரௌபதிமுர்மு கொடியேற்றி வைத்தார். அதே போன்று மாநிலங்களில் ஆளுநர்களும், யூனியன்பிரதேசங்களில் துணை நிலைஆளுநர்களும் கொடி ஏற்றி வைத்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று74வது குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கடற்கரைச்சாலையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சரியாக காலை 9.30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1 மணி நேரம் தாமதமாக வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் சுமார் ஒன்றரை மணி நேரம்தமிழிசை வருகைக்காக காத்திருந்தனர்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய காவலர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்மற்றும் சமூக சேவகர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை தமிழிசை வழங்கினார். புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

Advertisment

தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைத்துவிட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்து தேசியக் கொடி ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது. விழா நடைபெற்ற கடற்கரைச் சாலை காவல்துறை, கடலோரக் காவல்துறை, இந்திய கடலோர காவல் படையினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.