ADVERTISEMENT

சென்செக்ஸ் 346 புள்ளிகள் வீழ்ச்சி! அதனாலென்ன... முதலீட்டுக்கு இது சரியான தருணம்தான்!

07:03 AM Jul 09, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சென்செக்ஸ் 346 புள்ளிகள், நிப்டி 94 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்தன. எனினும், சந்தை இறக்கத்தில் உள்ள தருணத்தை முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள்.

சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு சந்தைகளுமே புதன்கிழமை (ஜூலை 8) சிவப்பு நிறத்தில் முடிவடைந்திருக்கிறது. தொடர்ச்சியாக ஆறு நாள்கள் ஏறுமுகத்தில் இருந்த வர்த்தகம் நேற்றுடன் அறுபட்டுள்ளன. உலகளவில் பொருளாதார மந்தநிலை, வளர்ச்சி குறித்த கலவையான கணிப்புகளாலும், லாபத்தை புக்கிங் செய்யும் முனைப்புடன் பலரும் பங்குகளை விற்க முனைந்ததாலும் இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டன.


மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், நேற்று ஒரே நாளில் தடாலடியாக 346 புள்ளிகள் / 0.94 சவீதம் சரிந்து 36,329.01 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 94 புள்ளிகள் / 0.87 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டு, 10,705.75 புள்ளிகளில் முடிந்தது.


''சந்தையில் வர்த்தகம் ஏற்றம் காண்பதற்கு முன்பாக குறியீட்டில் சிறிது சரிவு காணப்படுவது இயல்பானதுதான். பொதுவாக நேற்றைய வர்த்தக முடிவு என்பது அபாயகரமானது அல்ல. உலகளவில் வங்கிக் குறியீடுகள் தொடர்பாக சமீபத்தில் பரவிய எதிர்மறையான கணிப்புகளாலும் சந்தையில் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரும்பாலான முதலீட்டாளர்களின் பார்வையும் டி.சி.எஸ். நிறுவனத்தின் மீது குவிந்திருக்கிறது. அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று (ஜூலை 9) வெளியாகின்றன. இன்று அல்லது நாளையே சந்தைகள் மீண்டும் ஏற்றம் பெறக்கூடும்,'' என்கிறார் ரேலிகர் புரோக்கிங் நிறுவன துணைத்தலைவர் அஜித் மிஸ்ரா.


முதலீட்டுக்கான தருணம்:


நிப்டியில் இப்போதுள்ள வீழ்ச்சி என்பது முதலீட்டுக்கு உகந்த தருணமாக பார்க்கிறார்கள் சந்தை நிபுணர்கள். ஆனாலும், சந்தையில் நிலையற்ற தன்மை, அடுத்து வரும் நாள்களிலும் தொடரும் என்கிறார் கோட்டக் செக்யூரிட்டீஸின் சஹாஜ் அகர்வால்.


நிப்டியின் இன்றைய நிலை எப்படி?:


நிப்டியில் இன்றும் வர்த்தகத்தின் போக்கு சரிவை நோக்கிச் செல்லும்பட்சத்தில் அதன் இண்டெக்ஸ் 10,638.93 ஆகவும், அதைத் தொடர்ந்து 10,572.07 ஆகவும் இருக்கலாம். ஒருவேளை, சந்தை ஏற்றம் பெற்றால் 10,810.23 - 10,914.67 வரையிலும் கூட எழுச்சி பெறலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.


நிப்டி வங்கிப் பங்குகள்:


தேசிய பங்குச்சந்தைகளில் நேற்று வங்கிப் பங்குகளின் குறியீட்டு எண் 0.19 சதவீதம் வரை குறைந்து, 22,584.65 புள்ளிகளில் முடிவடைந்தது. குறியீட்டுக்கு ஆதரவு மைய நிலை 22,362.60 ஆகவும், அதைத் தொடர்ந்து 22,140.50 ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிப் பங்குகள் ஏற்றம் காணும் நிலையில் அதன் வளர்ச்சி 22,943.70 முதல் 23,302.70 வரை இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஆதாயம் தரும் பங்குகள்:


சந்தையில் நிலவும் வர்த்தகம் மற்றும் காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் பின்வரும் பங்குகள் ஆதாயம் அளிக்கலாம் எனச் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


அதன்படி, என்.சி.சி., எல்.ஐ.சி. ஹவுசிங், கட்டி, அம்புஜா சிமென்ட்ஸ், இ.ஐ.ஹெச்., எஸ்.ஜே.வி.என்., மணலி பெட்ரோகெம், ஜி.எஸ்.எப்.சி., தாமஸ் குக், சுதர்ஸன் கெம், என்.சி.எல். இண்டஸ்ட்ரீஸ், ஆஸ்டெக் லைப்சயின்சஸ், ஆர்க்கிட்பிளை இண்டஸ்ட்ரீஸ், ஹேரீஸன்ஸ், சிம்ப்ளெக்ஸ் இன்ப்ரா, பாம்பே பர்மா, ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரன்ட்ஸ் ஆகிய பங்குகள் ஆதாயம் அளிக்கலாம் என்கிறார்கள்.


கட்டாயம் முதலீடு செய்யலாம்...:


ஜூபிலான்ட் லைப், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், டிக்ஸான் டெக்னாலஜீஸ் (இண்டியா), லார்சன் அன்டு டூப்ரோ இன்போடெக், பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் கடந்த 52 வார உச்ச நிலையை உடைத்து ஏற்றம் கண்டுள்ளதால், மேலும் இப்பங்குகள் உயர வாய்ப்பு உள்ளது. அதனால் இப்பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்கிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள்.

இன்று முடிவுகள் அறிவிக்கும் நிறுவனங்கள்:


டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அர்விந்த் பேஷன்ஸ், சத்பவ் இன்ஜினியரிங், அரிஹண்ட் கேபிடல் மார்க்கெட்ஸ், பிராடி அன்டு மோரீஸ் இன்ஜினியரிங், சி.ஐ.எல். நோவா பெட்ரோகெமிக்கல்ஸ், ஹெச்.பி.எல். எலக்ட்ரிக் அன்டு பவர், ஸ்கில் இன்ப்ராஸ்டிரக்சர், ட்ரீ ஹவுஸ் எஜூகேஷன், திருப்பதி டயர்ஸ், டபுள்யூ.ஹெச். பிராடி அன்டு கோ ஆகிய நிறுவனங்கள் இன்று (ஜூலை 9) ஜனவரி & மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிடுகின்றன. இதன் முடிவுகளின் அடிப்படையில் இப்பங்குகளின் மீதான வர்த்தகம் ஏற்ற, இறக்கம் காணும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT