ADVERTISEMENT

பிரதமர் கார் மறிக்கப்பட்ட விவகாரம்; பயண பதிவுகளை பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

12:54 PM Jan 07, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் தனி தனியே குழு அமைத்துள்ளது. இதற்கிடையே நேற்று மூத்த வழக்கறிஞரான மணீந்தர் சிங், பிரதமர் பயணம் செய்த பாதை மறிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதாடிய மணீந்தர் சிங், பிரதமரின் கார் மறிக்கப்பட்டது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையல்ல எனவும், இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், விசாரணைக்காக இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதேபோல் மத்திய அரசு வழக்கறிஞர், பிரதமரின் வாகனம் மறிக்கப்பட்ட விவகாரம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனவும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரி உதவியுடன் விசாரணை நடத்தப்பட உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் பஞ்சாப் அரசு, இந்த சம்பவம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், சம்பவத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் யாரை வேண்டுமானலும் நியமிக்கலாம் என தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்து குழு மீது பஞ்சாப் அரசும், பஞ்சாப் அரசு அமைத்த குழு குறித்து மத்திய அரசும் கவலை தெரிவித்ததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மணீந்தர் சிங் சுதந்திரமான விசாரணை குழு அமைக்க வேண்டும் என விடுத்த கோரிக்கை குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது.

அதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், அதுதொடர்பாக நாளை பதிலளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான பதிவுகளைப் பத்திரப்படுத்தி பாதுகாக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பதிவுகளை பத்திரப்படுத்த தலைமை பதிவாளருக்கு உதவ டிஜி சண்டிகர் டிஜியையும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவரையும் நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டனர்.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்கள் திங்கட்கிழமை வரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT