Skip to main content

பிரதமர் பயணித்த சாலை மறிக்கப்பட்ட விவகாரம் - உயர்மட்ட குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு!   

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

sc

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் தனித்தனியே குழு அமைத்துள்ளது. இதற்கிடையே நேற்று மூத்த வழக்கறிஞரான மணீந்தர் சிங், பிரதமர் பயணம் செய்த பாதை மறிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள், பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான பதிவுகளைப் பத்திரப்படுத்தி பாதுகாக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு அமைத்துள்ள விசாரணை குழு, பஞ்சாப் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் வழக்கறிஞர், மத்திய அரசு குழுவே பிரதமர் சென்ற பாதை மறிக்கப்பட்டது குறித்து விசாரணை செய்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனப் பரிந்துரைத்தார்.

 

ஆனால் பஞ்சாப் அரசு, சுதந்திரமான விசாரணை குழுவை அமைத்து பிரதமரின் கார் சென்ற பாதை மறிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் எனக் கோரியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என இன்று அறிவிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.