ADVERTISEMENT

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியேறிய சரத் பவார்...

03:09 PM Nov 11, 2019 | santhoshkumar

மஹாராஷ்ட்ராவில் அமைச்சரவை அமைப்பதில் காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வரும் நிலையில் 9 ஆம் தேதியுடன் பாஜக ஆட்சியின் காலம் முடிந்தது. இந்த சூழ்நிலையில் 8ஆம் தேதி மகாராஷ்ட்ரா முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனையடுத்து மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரி அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் பாஜக இருப்பதால் மகாராஷ்ட்ராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை என மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் சந்திரகாந்த் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ர ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரியை சந்தித்த பிறகு, சிவ சேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ், என்சிபியுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க விருப்பமா என ஆளுநர் மாளிகை கேட்டுள்ளது. 56இடங்களை பெற்ற இரண்டாவது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் மாளிகை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல் பாஜக உடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால் ஆதரவு பற்றி முடிவு எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சிவசேனாவை சேர்ந்த மத்திய கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சர் அரவிந்த சாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவர் அவர் கட்சிக்குள் முக்கிய தலைவர்களைகொண்டு ஆலோசனை செய்தது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், “யாராவது ராஜினாமா செய்தால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைக்கப்போவதாக யாருக்கும் நான் வாக்கு தரவில்லை. காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்பே சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

இதனையடுத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவை இன்று மதியம் 12 மணியளவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது இந்த ஆலோசனை. இந்நிலையில் இன்று மாலை நான்கு மணிக்கு மீண்டும் காங்கிரஸ் உடனான சந்திப்பில் சிவசேனாவுடனான கூட்டணி குறித்த செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT