Skip to main content

சிவசேனா விவகாரம்: “ஆளுநர் எடுத்த முடிவு தவறு” - உச்சநீதிமன்றம்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

maharashtra sivecena political crisis supreme court related judgement

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.

 

இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார்.

 

இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், இந்த வழக்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் சார்ந்தது என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளான பி.எஸ்.நரசிம்ஹா, கிருஷ்ணா முராரி, எம்.ஆர். ஷா மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய 5 பேர்  கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று (11 ஆம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

maharashtra sivecena political crisis supreme court related judgement

 

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், "உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்ததால் அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. அப்போது ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி உத்தவ் தாக்கரே அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது என்பது தவறான முடிவாகும். மேலும், அவர் இந்த முடிவை எடுத்ததற்காக உரிய காரணத்தைக் கூறவில்லை. இருப்பினும், உத்தவ் தாக்கரே பதவி விலகிய பின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் கிடையாது.

 

ஏக்நாத் ஷிண்டே அணியினர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியினராக இல்லாமல் ஒரு அணியாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போதைய சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நாவேகர் அவர்கள் அணியினர் சார்பாக சட்டமன்றத்திற்கு பகத் கோகவலே என்பவரை புதிய கொறடாவாக நியமித்தது சட்ட விரோதமானது. மேலும், தகுதிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் சட்டமன்ற சபாநாயகர் ஒருவர் எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அதனால், இந்த வழக்கினை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுகிறோம்” எனத் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது. 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.