ADVERTISEMENT

ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க... இரு மாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு!

04:39 PM Oct 02, 2019 | santhoshb@nakk…

கடந்தாண்டு புதுச்சேரி காலாப்பட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஜோசப் கொலை, அதைத்தொடர்ந்து பழிக்கு பழியாக சில நாட்களுக்கு முன்பு காலாப்பட்டு சந்திரசேகர் கொலை மற்றும் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள், இரு மாநில எல்லைகளிலும் இடம் மாறி, மாறி தப்பித்து வருகின்றனர். மேலும் சமூக விரோத குற்றங்களையும் அரங்கேற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT


அதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்கவும், புதுச்சேரி காமராஜ் நகர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் அசம்பாவிதங்கள், சட்ட விரோத செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் இரு மாநில போலீசார் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில காவல்துறை அதிகாரிகள், கடலுார், விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT


புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தலைமையில் நடந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலுார் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், புதுச்சேரி கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் எல்லை பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை அடையாளம் காண்பது, தலைமறைவு குற்றவாளிகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வது என்றும், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மது கடத்தப்படுவதைத் தடுக்க இருமாநில போலீசார் இணைந்து செயல்படுவது என்றும் காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.


மேலும் எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளை வலுப்படுத்துவது, பரிசு பொருட்கள் கடத்திச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, தமிழக ரவுடிகள் புதுச்சேரியில் பதுங்கியிருந்தால் தகவல் தெரிவிக்கவும், புதுச்சேரி ரவுடிகள் தமிழகத்தில் பதுங்கியிருந்தால், அவர்களை கைது செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ரவுடிகளை ஒழிப்பதில் இரு மாநில போலீசாரும் தகவல் பரிமாற்றம் மூலம் இணைந்து செயல்படுவது என்று கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT