ADVERTISEMENT

தமிழ்நாட்டை பின்பற்ற மம்தாவுக்கு கோரிக்கை! நீட்டுக்கு எதிராக வலுக்கும் போராட்ட குரல்! 

10:29 AM Sep 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் வலுத்துவருகிறது. அந்த மாநிலத்தின் தேசிய அமைப்பான ‘பங்ளா பொக்கே’ என்ற அமைப்பு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிவருகிறது. கடந்த 18ஆம் தேதி கொல்கத்தாவில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய பலரும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை போல நமது முதல்வர் மம்தா பானர்ஜியும் செயலாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பங்களா பொக்கே அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் கார்கா சாட்டர்ஜி, “நீட் தேர்வு என்பது சொந்த மாநிலத்தில் டாக்டராக வேண்டும் என்ற வங்காள மக்களின் கனவுகளை சிதைத்துவிடும். சிதைத்துக்கொண்டும் இருக்கிறது. இந்தி பேசுகின்ற மாநிலங்களில் இயங்கும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு பயிற்சி மையங்கள், சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனங்கள் ஆகிய மூன்றும் கூட்டு சேர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவுகளைத் திருடுகின்றன.

இனி அடுத்தடுத்து வரும் நாட்களில், தேசிய தேர்வு முகமை மூலம் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு தேர்வுகளைப் புகுத்தி அனைத்தையும் இந்திமயமாக்கும் திட்டத்தை டெல்லி எடுத்துவருகிறது.

இந்தி மொழிக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்கும் நாம் அடிமைகள் கிடையாது. வங்காள மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை வேர்கள் அற்ற ஒட்டுண்ணிகளால் திருட முடியாது; திருடவும் அனுமதிக்கக் கூடாது! வங்காள மாணவர்களின் எதிர்காலத்திற்கான போராட்டம் இது. 2024இல் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் என்பது வெறுமனே பாஜகவுக்கு எதிரான தேர்தல் மட்டுமல்ல; அது பெரும் போர். அந்தப் போர் என்பது, டெல்லியில் குவிந்து கிடக்கும் மாநிலங்களுக்கான அதிகாரங்களை மீட்டெடுக்கும் போராட்டமாகவும் அந்தத் தேர்தல் போர் இருக்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.

கூட்டத்தில் பேசிய செயற்பாட்டாளர்கள் அனைவரும், “நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு முன்மாதிரியாக தமிழ்நாடு செயல்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை துவக்கியிருக்கிறார். அவருக்கு இந்தி பேசாத அனைத்து மாநிலங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களின் தளபதி அவர்தான். நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சனையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும். நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் முடிவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டைப் போல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சட்டமியற்றி குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் தர வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினர்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டைப் பின்பற்றி மேற்கு வங்கத்தில் போராட்டமும் கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT