ADVERTISEMENT

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 அன்று கூடுகிறது ராஜஸ்தான் சட்டமன்றம்...

01:32 PM Jul 30, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 அன்று ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்ட அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட்டை யாரும் எதிர்பாராத விதமாக கட்சியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது. இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேரைத் தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முயன்று வருகிறார் அசோக் கெலாட். இதற்காக ஆளுநரிடம் அனுமதி கோரி மூன்று முறை கடிதம் கொடுத்த நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து அசோக் கெலாட், பிரதமர் மோடியின் உதவியை நாடிய பிறகு, அவையைக் கூட்ட ஒப்புக்கொண்டார், அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா. மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஆகஸ்ட் 14 அன்று சட்டசபையைக் கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், அவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட அரசியல் குழப்பத்திற்கு பிறகு கூடும் இந்த கூட்டம், அம்மாநில அரசியலில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT