ADVERTISEMENT

முதல் கூட்டத்திலேயே அதிரடி முடிவை எடுத்த பஞ்சாப் அமைச்சரவை!

06:19 PM Mar 19, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 10 ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் இன்று (19/03/2022) நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட 10 பேரில் 8 பேர் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அனைவரும் பஞ்சாபி மொழியிலே உறுதி மொழியை வாசித்து பதவியேற்று கொண்டனர். பின்னர், அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதலமைச்சர் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, மக்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், இளைஞர்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், "எனது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ஒரு மாதத்திற்குள் 25,000 காலி பணியிடங்களை அறிவிக்க பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு நாங்கள் உறுதியளித்தபடி, நமது பஞ்சாப் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவது ஆம் ஆத்மி அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்துடன் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் அமைச்சரவை முடிவால் இளைஞர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT