ADVERTISEMENT

“புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது” -முதல்வர் நாராயணசாமி பேட்டி!

07:11 AM Aug 03, 2020 | kalaimohan

ADVERTISEMENT

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று வீடியோ பதிவிலான செய்தியை அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

ADVERTISEMENT

"புதுச்சேரி அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ குழுவின் கணக்குப்படி, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 6000 ஆகவும், அதில் 2000 பேர் சிகிச்சையிலும் இருப்பார்கள். அவர்கள் 600 முதல் 700 பேர் தீவிரமாக கண்காணிக்க வேண்டியவர்களாகவும் இருப்பார்கள். மத்திய அரசின் உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட வீட்டை மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளோம். அந்த வீட்டில் இருப்பவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் அல்லது அவர் தனிமைப் படுத்தப்பட்டால் போதும் என்று நினைத்தால் வீட்டிலேயே தனியாக இருக்க வைக்க வேண்டும். மருத்துவர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவைப்பட்டால் சிகிச்சை அளிக்கவும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ போன்ற மாற்று மருத்துவ முறைகள் மூலம் சிகிச்சை பெற விரும்புவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆலோசனை செய்தோம். மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ மையத்தையும், புதுச்சேரி அரசு மருத்துவ மையத்தையும் ஒருங்கிணைத்து இங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் கரோனா நோய்க்கு சித்தா முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் தொடங்கும்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பல மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால் குலக்கல்வியை கொண்டுவர விரும்புகின்றனர். கட்டாய மொழியாக மும்மொழித் திட்டம் வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி புதிய கல்விக் கொள்கையானது வேலை வாய்ப்பினை நோக்கி செல்கிறது என்று சொல்கின்றனர். ஆனால் அதனை முழுமையாக படித்து பார்க்கும்போது மக்களுக்கு பயன்படுகின்ற திட்டத்தை கொடுக்காததாக இருக்கிறது. புதுச்சேரி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலம். நம்முடைய பாடத்திட்டங்கள், கல்விக் கொள்கைகள் எல்லாம் வேலைவாய்ப்பை நோக்கி தான் செல்கின்றது. இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. ஆனால் மத்திய அரசு இதற்கான நிதி எங்கிருந்து கொண்டு வரப் போகின்றது? மாநிலங்கள் மீது சுமத்த போகின்றதா? என்பது தெளிவுபட கூறப்படவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரை இலவச கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசு இப்போதுதான் இந்த திட்டத்தை கொண்டு வருகின்றது. ஆகவே புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசின் திட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அது மட்டுமின்றி சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு முனைகிறது.

இந்திய நாட்டில் பல கலாச்சாரம், பல மொழிகள், பல மதங்கள் இருக்கும்போது மாநிலத்துக்கு ஏற்றார்போல கல்விக்கொள்கை இருக்க வேண்டுமே தவிர மத்திய அரசு விரும்புவது போல் இருக்கக்கூடாது. இது சம்பந்தமாக நடைபெற்ற கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரி அரசின் நிலையை தெளிவாக கூறியுள்ளார். புதுச்சேரியில் இருமொழிக் கொள்கை இருக்க வேண்டும். தாய்மொழியாகிய தமிழும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். இந்தி விருப்பப்பட்டால் படிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதே தவிர இந்தியை கட்டாய பாடமாக ஆக்கக்கூடாது. மத்திய அரசு இந்தியை திணிப்பதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

புதுச்சேரி மாநிலத்திற்கு என்று தனி பாரம்பரியம் இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு என ஐந்து அரசு அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே மற்ற மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரி தனித்தன்மை வாய்ந்த மாநிலம். மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களின் கருத்துகளை கேட்டு புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எங்களுடைய கருத்தை தெரிவிப்போம். அது சம்பந்தமான விவாதத்தை அமைச்சரவையில் வைத்து பேசி நடவடிக்கை எடுப்போம். புதிய கல்விக் கொள்கை சம்பந்தமான விரிவான அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இது சம்பந்தமாக மாநில அரசு முடிவு எடுக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT